

கரூரை சேர்ந்த அம்மன் கெமிக்கல்ஸ், உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்த 740 டன் அமோனியம் நைட்ரேட், சென்னை துறைமுகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்டதாக, சென்னை சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட இது, மணலி சரக்குப் பெட்டக முனையத்தில் 37 கன்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ளது.
லெபனானில் அமோனியம் நைட்ரேட் வெடித்த விபத்தில் 138 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, மணலியில் இருந்து அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த சுங்கத் துறைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், உத்தரவிட்டது. இதையடுத்து, அமோனியம் நைட்ரேட்டை சுங்கத் துறை ஏலம் விட்டது. ஹைதராபாதில் உள்ள சால்வோ கெமிக்கல்ஸ் அண்ட் எக்ஸ்புளோசிவ் நிறுவனம் இதை ஏலம் எடுத்தது.
இந்நிலையில், மணலியில் இருந்து லாரிகள் மூலம் 10 கன்டெய்னர்கள் ஹைதராபாதில் உள்ள சால்வோ நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்டது. மற்ற 27 கன்டெய்னர்கள் ஓரிரு நாளில் அனுப்பப்படும் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இதை உறுதிப்படுத்தினார்.
நாடு முழுவதும் துறைமுகங்களில் கோரப்படாத ரூ.20 ஆயிரம் கோடி சரக்குகளை மத்திய அரசு ஏல முறையில் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அவற்றில் ஆபத்து விளைவிக்கும் பொருட்கள்கூட இருக்கலாம். மத்திய அரசு அவற்றை ஏலத்தில் விடவேண்டும் என்று சென்னை சுங்கத் துறை முகவர்கள் சங்க முன்னாள் தலைவர் கிரி தெரிவித்தார்.