Published : 11 Aug 2020 07:50 AM
Last Updated : 11 Aug 2020 07:50 AM

இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டதலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: தமிழக மக்களுக்கு எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள். நன்மையால் தீமையை வெல்ல கிருஷ்ணர் இப்பூவுலகில் அவதரித்ததை இந்தவிழா காட்டுகிறது. கிருஷ்ண அவதாரத்தில் கடவுள் தீயசக்திகளை வெல்வதுடன், பகவத்கீதையில் சொல்லப்பட்டுள்ள போதனைகள் வாயிலாக மனிதாபிமானத்துக்கான நல்வழியைக் காட்டுகிறார். வாழ்க்கையில் நன்மை, நல்லொழுக்கம் பேண உறுதியேற்போம். இந்த விழா நமது மாநிலத்தில் அமைதி, நட்புணர்வு, நல்லிணக்கம், வளமை, ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்.

முதல்வர் பழனிசாமி: ‘‘அறம் பிறழ்கின்றபோது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்’’ என்று உரைத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினமான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளைக் கொண்டாடும் மக்களுக்கு ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள். ஒப்பற்ற ஞான நூலான பகவத்கீதையை உலகுக்கு அருளிய ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்தஇத்திருநாளில், கீதையின் போதனைகளான அனைவரிடத்திலும் அன்பு செலுத்துதல், பலன் கருதாமல் கடமையைச் செய்தல்,பற்றற்று இருத்தல், எளிமையாக வாழ்தல் போன்றவற்றை பின்பற்றி, மகிழ்வுடன் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ‘‘நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலைநிறுத்தவும் யுகம்தோறும் பிறக்கிறேன்’’ என்று உரைத்த காக்கும்கடவுள் பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த திருநாளை உவகையோடு கொண்டாடும் மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: ‘‘பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால், எடுத்த செயலில் வெற்றி பெறலாம்’’ என்ற கிருஷ்ணரின் கீதை உபதேசத்தை நெஞ்சில் நிறுத்தி, வெற்றிகளைக் குவிப்போம். அதர்மத்தை அகற்றி, தர்மம் செழிக்கவும், சத்தியம், அன்பை நிலைத்திடச் செய்யவும் உறுதியேற்போம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:துன்பங்கள் நீங்கி இன்பங்கள் சேர்க்கும் இந்த திருநாள், கரோனாவை அழித்து நன்மைபயக்கும் நாளாக மலரவாழ்த்துகிறேன்.

ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x