தாமிரபரணி - மருதூர் மேலக்கால் பாசனத்தில் தண்ணீரின்றி 10 ஆயிரம் ஏக்கரில் கருகும் வாழைப் பயிர்கள்: காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா?

மருதூர் மேலக்கால் பாசனத்தில் வெள்ளூர் பகுதியில் தண்ணீர் இல்லாமல் கருகி வரும் வாழைப் பயிர்கள்.
மருதூர் மேலக்கால் பாசனத்தில் வெள்ளூர் பகுதியில் தண்ணீர் இல்லாமல் கருகி வரும் வாழைப் பயிர்கள்.
Updated on
2 min read

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைப் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளா, கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கரில் வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் இழப்பீடு கோரியுள்ளனர்.

மருதூர் மேலக்கால்:

இந்த நிலை ஒருபுறம் இருக்க தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிர்கள் கருகி வருகின்றன. தாமிரபரணி பாசனத்தின் கடை மடை பகுதிகளான மருதூர் மேலக்கால் பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழைப் பயிர்களுக்கு தான் இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனம் மூலம் 46,107 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. இதில் மருதூர் மேலக்கால் மற்றும் அதன் கீழுள்ள 16 பாசன குளங்கள் மூலம் 23 கிராமங்களில் உள்ள 12,783 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெற்று வருகின்றன. மேலக்கால் பாசனத்தை பொறுத்தவரை பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடியை கைவிட்டுவிட்டு வாழை சாகுபடிக்கு மாறிவிட்டனர்.

இந்த பகுதியில் தற்போது சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட வளர்ச்சி நிலையில் உள்ள இந்த வாழை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறக்கக் கோரி அரசுக்கு விவசாயிகள் சார்பில் கோரிக்கை கோடுத்தும் இதுவரை தண்ணீர் திறக்கபடவில்லை.

கருகும் வாழைகள்:

இது குறித்து பொருநை நதிநீர் மேலாண்மை சங்க தலைவர் இல.கண்ணன் கூறியதாவது: மருதூர் மேலக்காலில் கடந்த மார்ச் 31-ம் தேதியோடு தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. இங்குள்ள 16 குளங்களும் ஏப்ரல் மாத கடைசியிலேயே வறண்டுவிட்டன. கார் சாகுபடி காலமான ஜூன் மாதத்திலும் மேலக்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதன் காரணமாக இந்த பாசன பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வாழைப்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் வறட்சியின் பிடியில் சிக்கி வாடி கருகி வருகின்றன. வசதியான ஒருசில விவசாயிகள் ஆழ்துளை கிணறுகள் அமைத்து வாழைப் பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். ஆனால், இந்த பகுதியில் பெரும்பான்மையானவர்கள் குறு மற்றும் சிறு விவசாயிகளே. அவர்களால் உடனடியாக ஆழ்துளை கிணறுகள் அமைக்க முடியாது.

ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள வடகால், தென்கால் பாசன பகுதிகளில் உள்ள வாழைப்பயிர்களை காப்பாற்ற 15.05.2020 முதல் 31.05.2020 வரை தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் அப்போதும் மேலக்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை. மேலும் தற்போது தாமிரபரணியில் உள்ள தலைமடை பகுதிகளான கோடைமேலழகியான், நதியுண்ணி மற்றும் கன்னடியன் கால்வாய்களில் பயிர்களை காப்பதற்காக 05.08.2020 முதல் 14.08.2020 வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் திறக்க வேண்டும்:

ஆனால், கடைமடை பகுதியான மேலக்கால்லில் தண்ணீர் திறக்கவில்லை. உடனடியாக தண்ணீர் திறக்கவில்லை எனில் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை பயிர்களும் மடிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகும்.

தற்போது தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்து பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

எனவே, மேலக்கால் பாசனத்தில் கருகும் வாழைப்பயிர்களை கப்பாற்றவும், 23 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in