மங்கள இசைக் கலைஞர்களுக்கு தனி நலவாரியம் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு: அரசு பதில் மனு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

தவில், நாதஸ்வரம் போன்ற மங்கள இசைக் கலைஞர்களுக்குத் தனி வாரியம் ஏற்படுத்தி, நிவாரண உதவிகள் வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அரசு சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தவில், நாதஸ்வரம் போன்ற மங்கள இசைக் கலைஞர்களுக்குத் தனி வாரியம் ஏற்படுத்தி, நிவாரண உதவிகள் வழங்கக் கோரி தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை தொடர்ந்த வழக்கில், தமிழக சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையின் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “கடந்த 2007-ம் ஆண்டு நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட மங்கள இசைக் கலைஞர்களை இணைத்து, தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

மங்கள இசைக்கலையை அழியாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது, கோயில்களிலும், சுவாமி ஊர்வலங்களிலும், தேர்த் திருவிழாக்களிலும் நாதஸ்வரம், தவிலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா ஊரடங்கு காலத்தில், நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 35,385 உறுப்பினர்களில், 24,000க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் சுமார் 5 கோடி ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் மூலம் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தனியாக மங்கள இசைக் கலைஞர்களுக்கு வாரியம் அமைக்க வேண்டிய அவசியம் எழவில்லை. மேலும், இது அரசின் கொள்கை முடிவு” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஆகஸ்ட் 13-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in