

சாலையில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.50,000 அபராதம் விதித்தது.
மதுரை மாநகராட்சி 2-வது மண்டலம் 44-வது வார்டில் மேலூர் மெயின் ரோட்டில் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு எதிரில் சாலையோரத்தில் உள்ள மாநகராட்சி குப்பைத் தொட்டி மற்றும் குப்பைத்தொட்டி அருகில் மருத்துவக் கழிவுகளை தனியார் மருத்துமனையினர் கொட்டி விட்டு சென்று விட்டனர்.
தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு மருத்துவ கழிவுகளை பொது இடத்தில் கொட்டிவிட்டு சென்ற தனியார் மருத்துவமனையினை கண்டறிந்து அந்த மருத்துவமனை ஊழியர்கள் மூலமாகவே மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு ரூ.50,000 அபராதம் விதித்தனர்.
இந்த ஆய்வில் சுகாதார ஆய்வாளர்கள் ஓம்சக்தி, மனோகரன், துப்புரவு ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.