

கரோனாவிலிருந்து மீண்டுவந்து மக்கள் பணியாற்றுவேன் என மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.சரவணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.சரவணனுக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையிலிருந்து பேசிய எம்.எல்.ஏ. சரவணன், கரோனாவிலிருந்து பூரண குணமடைந்து விரைவில் மீண்டும் மக்கள் பணியாற்றுவேன் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களில் இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கு தொற்று:
மதுரையில் கடந்த வாரம் முதல்வர் பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக எம்எல்ஏவுக்கு கரோனா வந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு எம்எல்ஏவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மதுரைக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
மேலும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சிகளில் அதிமுக அமைச்சர்கள், உள்ளூர் எம்எல்ஏ-க்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சோழவந்தான் அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
தொடர்ந்து இன்று, அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.