Published : 10 Aug 2020 04:32 PM
Last Updated : 10 Aug 2020 04:32 PM

வருவாய் அதிகரித்திருப்பதால் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: நாகர்கோவில் ரயில் பயணிகள் சங்கம்

நாகர்கோவில்

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தாலும் பயணிகளின் கோரிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்படாமலே இருப்பதாக ரயில் பயணிகள் சங்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள 103 ரயில் நிலையங்களில் வருவாய் அடிப்படையில் எட்டாவது இடத்தில் உள்ளது. இதேபோல் வருவாய் அடிப்படையில் என்எஸ்ஜி-3 பிரிவு ரயில் நிலையமாகவும் வகையறுக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் நிலையம் வழியாக 29 ரயில்களும், நாகர்கோவிலில் இருந்து புறப்படும்படியாக 21 ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் 2018-19 ஆம் நிதியாண்டு வருவாய் ரூ.54 கோடியே 88 லட்சமாக இருந்தது. இந்த நிலையில், 2019-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி முதல் நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக தாம்பரத்துக்கு வாரம் மூன்று நாட்கள் ரயிலும், திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு வந்த அந்தியோதயா ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்தும் இயக்கப்பட்டது. இதனால் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தின் வருவாய் கணிசமாக உயரத் தொடங்கியது. அதிலும் இருவழிப் பாதைப் பணிகளுக்காக இந்த ரயில் பல நாட்கள் ரத்து செய்யப்பட்டு வந்த நிலையிலும் நாகர்கோவில் ரயில் நிலையத்தின் வருவாயில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

இதன்படி 2019-20 ஆம் நிதி ஆண்டின் வருவாய் ரூ.65 கோடியே 84 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் 10 கோடி ரூபாய் அதாவது 20 சதவீதம் அதிகமாகும். இந்நிலையில் வருவாய் அதிகரித்துவரும் சூழலில் கிடப்பில் போடப்பட்டுள்ள பயணிகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்றித்தர வேண்டும் எனக் குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம், ''ரயில்வே வாரியம் ரயில் நிலைய வளர்ச்சிப் பணிகளுக்காக ரயில் நிலையங்களை பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது. அதன்படி, ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் உள்ள ரயில் நிலையங்களை என்.எஸ்.ஜி 1 என்றும், ரூ.100 கோடி முதல் ரூ.500 கோடி வரை வருவாய் உள்ள ரயில் நிலையங்கள் என்.எஸ்.ஜி 2 என்றும், ரூ.20 கோடி முதல் ரூ.100 கோடி வரை வருவாய் உள்ள ரயில் நிலையங்கள் என்.எஸ்.ஜி 3 என்றும், ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை வருவாய் உள்ள ரயில் நிலையங்கள் என்.எஸ்.ஜி 4 என்றும், ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை வருவாய் உள்ள ரயில் நிலையங்கள்என்.எஸ்.ஜி 5 என்றும், அதற்கும் கீழ் ஆண்டு வருமானம் உள்ள ரயில் நிலையங்கள் என்.எஸ்.ஜி 6 என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இப்போது நாகர்கோவில் சந்திப்பு ரயில்நிலையம் என்.எஸ்.ஜி 3-ல் உள்ளது.

குமரி மாவட்டத்திலிருந்து பல்வேறு ரயில்கள் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலி மார்க்கங்களில் இயக்கப்பட்டாலும் திருநெல்வேலி மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்களால் மட்டுமே அதிக அளவில் வருவாய் கிடைத்து வருகிறது. அதேநேரம் குமரி மாவட்ட ரயில் வழித்தடங்கள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் இருப்பதால் மலையாளிகளின் வசதிக்காக கேரள வழித்தடத்திலேயே அதிக ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டுமென்ற நெடுநாள் கோரிக்கை, இன்னும் கிடப்பில் கிடக்கிறது.

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்குப் புதிதாக இயக்கப்பட்ட இரண்டு ரயில்களால் மட்டும் நாகர்கோவில் ரயில் நிலையத்தின் வருவாய் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் நாகர்கோவிலில் இருந்து தமிழகம் மார்க்கமாகக் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டால் நாகர்கோவில் ரயில் நிலையத்தின் வருவாய் இன்னம் பல மடங்கு உயரும்.

குமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் முன்பதிவு இருக்கை கிடைக்காத காரணத்தால் குளிர்சாதனத் தனியார் பேருந்துகளில் அதிகக் கட்டணம் கொடுத்து ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். குமரி மாவட்டப் பயணிகள் பயன்படும் வகையில் முழுவதும் குளிர்சாதனப் பெட்டிகள் கொண்ட ரயில்கள் எதுவும் இதுவரை இயக்கப்படவில்லை. கேரளாவில் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு முழுவதும் குளிர்சாதனப் பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் குமரி மாவட்டப் பயணிகள் பயன்படும் வகையில் நாகர்கோவிலில் இருந்து மாநிலத்தின் தலைநகரான சென்னைக்குத் தினசரி ரயிலும் நாகர்கோவிலிருந்து பெங்களூருவுக்கு வார விடுமுறை நாட்களில் பயணிக்கும் வகையில் ரயிலும் இயக்கப்பட்டால் ரயில்வே துறைக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கும். சீக்கிரமே நாகர்கோவில் ரயில் நிலையத்தின் ஆண்டு வருவாய் ரூ.100 கோடியைத் தாண்டும். இதன் மூலம் என்.எஸ்.ஜி மதிப்பீட்டில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இந்த ரயில்நிலையம் 2-வது இடத்துக்கு நகரும். இதன்மூலம் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கும் கூடுதல் வசதிகள் கிடைக்கும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x