விநாயகர் சிலைகள் தயாரிக்க ஆர்டர்கள் இல்லாததால் வேலையிழந்த தொழிலாளர்கள்: கடைசி நேர ஆர்டர்களுக்காகக் காத்திருப்பு

விநாயகர் சிலைகள் தயாரிக்க ஆர்டர்கள் இல்லாததால் வேலையிழந்த தொழிலாளர்கள்: கடைசி நேர ஆர்டர்களுக்காகக் காத்திருப்பு
Updated on
2 min read

விநாயகர் சிலைகள் தயாரிக்க எந்தவித ஆர்டரும் கிடைக்காததால் வருவாய் இழப்பு ஏற்பட்டதுடன், தொழிலாளர்களும் வேலையிழந்து உள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் 15 நாட்களே உள்ளநிலையில் கடைசிநேர ஆர்டர்கள் ஏதும் வருமா என்ற எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.

திண்டுக்கல் அருகே நொச்சி ஓடைப்பட்டியில் சுடுபொம்மைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுவருகிறது கலை டெரகோட்டா நிறுவனம்.

இங்கு களிமண்ணால் ஆன பல்வேறு விதமான குதிரை, யானை உள்ளிட்ட பொம்மைகள், விளக்குகள், அலங்கார பொருட்கள் ஆகியவற்றை செய்துவருகின்றனர். கார்த்திகை மாதத்தில் விளக்குசுட்டிக்கு வெளி மாவட்ட, வெளிமாநிலங்களில் இருந்தும் பெரிய அளவில் ஆர்டர்கள் கிடைக்கும்.

அதேபோல் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முன்னதாக சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் செய்துதரக்கோரி பெரிய அளவிலான ஆர்டர்கள் கிடைக்கும்.

வழக்கமான பொருட்கள் செய்வதுடன் ஆண்டுக்கு ஒரு முறை பல்வேறு வகையான விளக்குசுட்டிகள் மற்றும் விநாயகர் சிலைகள் செய்வதன் மூலம் அதிக தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தி வேலைவாய்ப்பும் வழங்கி, கணிசமான வருவாயும் ஈட்டிவந்தனர்.

இங்குதயாரிக்கும் பொருட்கள் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, தேனி, கரூர், திருச்சி மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் இங்கிருந்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிறியது முதல் 5 அடி உயர சிலை வரை பல்வேறு வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போல் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் செய்ய ஆர்டர் கிடைக்கும். இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக எந்த ஆர்டரும் இல்லாமல் இருக்கின்றனர். வழக்கமான குதிரை, யானை பொம்மைகள் செய்வது, அலங்காரப் பொருட்கள் போன்றவை செய்யும் பணியில் குறைந்த அளவிலான தொழிலாளர்களே ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சுடுமண் பொம்மைகள் தயாரிக்கும் ஜி.கஜேந்திரன் கூறுகையில், வழக்கமாக செய்யும் பணிகளுடன் கார்த்திகை மாதத்திற்கான விளக்குசுட்டிகள், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான விநாயகர் சிலைகள் செய்ய ஆர்டர்கள் கிடைப்பது எங்களுக்குக் கூடுதல் வருமானமாக இருந்துவந்தது.

அதே நேரத்தில் அதிக தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்க முடிந்தது.

தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாட அரசு பல கட்டுப்பாடுகள் விதிக்கும் என்று மக்கள் நினைப்பதால் விநாயகர் சிலைகள் செய்ய இதுவரை ஒரு ஆர்டர் கூட வரவில்லை.

கடந்த ஆண்டு ரூ.5 லட்சம் அளவிற்கு சிறிய சிலைகள் முதல் பெரிய சிலைகள் வரை விநாயகர் சிலைகள் செய்ய ஆர்டர் கிடைத்தது. சிறியது முதல் பெரிய அளவிலான ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை செய்து வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு அனுப்பிவைத்தோம்.

வீடுகளில் வைத்து வழிபட தண்ணீரில் கரையும் வகையில் சிறிய விநாயகர் சிலைகள் செய்வோம். இதை தெருவோர வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்று விற்பனை செய்வர். தற்போது அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.

கடந்த ஆண்டு விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் 40 தொழிலாளர்களை ஈடுபடுத்தினேன். இந்த ஆண்டு ஒருவருக்கு கூட வேலைவாய்ப்பு வழங்கமுடியவில்லை. வருமான இழப்பு எனக்கு மட்டுமல்ல, சிலைசெய்யும் 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் தான்.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் 13 நாட்களே உள்ளநிலையில் கடைசிநேரத்திலாவது யாரேனும் சிலைகள் தயாரிக்க ஆர்டர் தருவார்களாக என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறோம், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in