Last Updated : 10 Aug, 2020 03:26 PM

 

Published : 10 Aug 2020 03:26 PM
Last Updated : 10 Aug 2020 03:26 PM

நீர்நிலைகளில் கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி

மதுரை

நீர் நிலைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பரமக்குடி வாதவநேரியைச் சேர்ந்த அன்புச்செல்வம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

எங்கள் கிராமத்தின் ஒரே நீர் ஆதாரமான வாதவநேரி கண்மாய் முழுவதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த கருவேல மரங்களை அகற்றிவிட்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாயை ஆழப்படுத்தி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்களை ஏலம் விட்டால் அரசுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். ஆனால் கருவேல மரங்களை வெட்டாமல் குடிமராமத்து பணி மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே இது தொடர்பாக கிராம மக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரரின் தந்தை தான் உறுப்பினராக உள்ள சங்கத்தை குடிமராமத்து பணிக்காக பதிவு செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடியானது. தற்போது மகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வாதவநேரி கண்மாயில் கருவேல மரம் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. ஒரு சில மரங்கள் மட்டுமே உள்ளன. விவசாயிகளின் நலனுக்கா கண்மாய் ஆழப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது. மனுதாரர் மனுவில் பொதுநலன் இல்லை. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் நீர் நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நீர் நிலைகளில் சீமை கருவேல மரங்களை அகற்றும் இடங்களில் வேறு மரங்களை நட வேண்டும். நீர் நிலைகளில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை விரைவில் மேற்கொண்டு தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என முதன்மை அமர்வு உத்தரவிட்டது.

இந்த உத்தரவு பேப்பரில் மட்டுமே உள்ளது. இந்த உத்தரவை நிறைவேற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கருவேல மரங்களை அகற்றால் வேறு மரங்களை வளர்ப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பலனும் ஏற்படாது.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை கருவேல மரங்களை முழுமையாக அகற்றிவிட்டு மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் தனது மனு தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தில் உரிய தகவல் பெறலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x