

தமிழகத்தில் நேற்று 5,994 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் சென்னையில் 989 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசிய அளவிலும், உலக அளவிலும் பல நாடுகளுடன் மாநிலங்களின் தொற்று எண்ணிக்கை மிஞ்சும் வகையில் உள்ளது.
5,994 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 16.4 சதவீதத் தொற்று சென்னையில் (989) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,96,901-ல் சென்னையில் மட்டும் 1,09,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 36.7 சதவீதம் ஆகும். 2,38,638 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 80.3 சதவீதமாக உள்ளது.
இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.
தமிழகம் 2.96 லட்சம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், சென்னையும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 5 லட்சத்து 32 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 5,779 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்து சமநிலையில் உள்ள நிலையில் மாவட்டங்களில் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
நேற்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 24 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,32,443.
தமிழகத்தில் உயிரிழப்பு 4,927-ஐ (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) கடந்துள்ளது. உயிரிழந்த 4,927 பேரில் சென்னையில் மட்டுமே 2,302 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் சென்னையின் உயிரிழப்பு 46 சதவீதம் ஆகும். இந்தியாவில் அதிக உயிரிழப்பில் மகாராஷ்டிராவுக்கு (17,367) அடுத்து 2-ம் இடத்திற்கு தமிழகம் (4,927) முன்னேறியுள்ளது. 3-ம் இடத்தில் டெல்லி (4,098) உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையின் மொத்த தொற்று எண்ணிக்கையில் சென்னை உயிரிழப்பின் மரண விகிதம் 2.1% ஆக உள்ளது. மொத்த தொற்று எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.6% ஆக உள்ளது. கடந்த 9 நாட்களாக உயிரிழப்போர் எண்ணிக்கை 900-ஐத் தாண்டியுள்ளது கவலையளிக்கும் ஒன்றாகும்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள 44 மாதிரி சேகரிக்கும் மையங்கள் மற்றும் 10 நடமாடும் மையங்கள் என மொத்தம் 54 மையங்கள் உள்ளன. இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் பெரு நகரங்களில் அதிக பரிசோதனை மேற்கோண்டதில் பெருநகர சென்னை மாநகராட்சியே முதலிடம்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 10 லட்சம் நபர்களில் 87,000 நபர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன (87,000 test per million). நாள்தோறும் சென்னையில் மட்டும் 12,000 முதல் 15,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் வேகவேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களும் சென்னை, டெல்லி எண்ணிக்கையை வேகமாகக் கடந்து செல்கின்றன.
தென் மாநிலங்களின் மொத்த தொற்று எண்ணிக்கை இந்தியத் தொற்று எண்ணிக்கையில் 36% ஆக உள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவில் மட்டும் மொத்த தொற்று 22 % ஆகும். பல மாநிலங்கள் 40,000 எண்ணிக்கையைக் கடந்த பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள நாடுகளுடன் போட்டியிடுகிறது.
தொற்று எண்ணிக்கை: உலக அளவில் டாப் 20 நாடுகளின் பட்டியல்
உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும், ரஷ்யா நான்காம் இடத்திலும் உள்ளன.10-வது இடத்தில் ஸ்பெயினும், 20-வது இடத்திலும் பிரான்ஸும் உள்ளன.
ஆனால், இந்தப் பட்டியலில் உள்ள நாடுகளின் தொற்று எண்ணிக்கையை இந்தியாவில் பல மாநிலங்கள் மிஞ்சிவிட்டன. மகாராஷ்டிராவில் தொற்று எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 5,03,084 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 5-ம் இடத்திலிருந்த மெக்சிகோவை மகாராஷ்டிரா பின்னுக்குத் தள்ளியுள்ளது.
அடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் சவுதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்துக்கு அடுத்து 13-வது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஆந்திரா 2,17,040 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் பிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளி 20-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னை, உலக அளவில் கத்தாருக்கு அடுத்தபடியாக கஜகஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி 1,09,117 என்கிற எண்ணிக்கையுடன் 26-வது இடத்தில் உள்ளது. உலகின் டாப் 20 நாடுகள் பட்டியலில் மஹாராஷ்டிடிரா, தமிழகம், டெல்லி, ஆந்திரா மாநிலங்கள் உள்ளன.
தொற்று எண்ணிக்கை: இந்திய அளவில் டாப் 10 மாநிலங்களின் பட்டியல்
இந்திய அளவில் மகாராஷ்டிரா முதலிடத்தில் (5,03,084) உள்ளது. 2,96,901 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. ஆந்திரப் பிரதேசம் (2,17,040) மூன்றாம் இடத்திலும், கர்நாடகா 1,72,102 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும் உள்ளன.
டெல்லி 1,44,127 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 1,18,038 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 92,615 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், தெலங்கானா 79,495 எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், குஜராத் 69,869 என்கிற எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், பிஹார் 75,294 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.
ஆரம்பத்தில் இந்தியா, 1 லட்சம் என்கிற தொற்று எண்ணிக்கையை அடைய 60 நாட்களுக்கு மேல் இந்தியா எடுத்துக்கொண்டது. 2 வது லட்சத்தை அடைய 1 மாதம் அளவுக்கு ஆனது. ஆனால் தற்போது நாளொன்றுக்கு 63,000 என்கிற அளவில் 2 நாட்களில் 1 லட்சம் தொற்று எண்ணிக்கையை நோக்கி செல்கிறது.
ஆசிய அளவில் டாப் 15 இடங்களில் உள்ள நாடுகளின் பட்டியல்
ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து ஈரான், சவுதி அரேபியா, பாகிஸ்தான், வங்கதேசம், துருக்கி, ஈராக், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, கத்தார் என 10 நாடுகள் உள்ளன.
ஆனால், இந்தப் பட்டியலில் உள்ள நாடுகளின் மொத்த எண்ணிக்கையை இந்தியாவில் பல மாநிலங்கள் மிஞ்சிவிட்டன. அதாவது ஆசிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இந்தியாவும் அடுத்த பத்து இடங்களில் மற்ற நாடுகளைவிட மாநிலங்களின் எண்ணிக்கையும் உள்ளது.
ஆசிய கண்டத்தின் முதலிடத்தில் இந்தியா (22,14,137) அடுத்த இடத்தில் உள்ள ஈரானை (3,24,692) பின்னுக்குத் தள்ளி மகாராஷ்டிரா (5,03,084) ஆசியாவில் 2-ம் இடத்தில் உள்ளது. 3-ம் இடத்தில் ஈரான் உள்ள நிலையில் 4-ம் இடத்தில் உள்ள சவுதி அரேபியாவை (2,87,262) பின்னுக்குத் தள்ளி தமிழகம் (2,96,901) என்கிற எண்ணிக்கையுடன் ஆசியாவில் நான்காவது பெரிய எண்ணிக்கையில் உள்ளது.
ஆந்திரா 2,17,040 என்கிற எண்ணிக்கையுடன் ஆசிய அளவில் 9-வது இடத்திலும் உள்ளது. அதாவது ஆசிய அளவில் முதல் பத்து நாடுகளுக்குப் போட்டியாக இந்தியாவில் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா ஆகியவை முதல் 10 இடத்திற்குள் உள்ளன.
தமிழக நிலவரம்
தமிழகத்தில் 37 மாவட்டங்களில் சென்னைக்கு (1,09,117) அடுத்தபடியாக செங்கல்பட்டு 17,811, திருவள்ளூர் 17,013, மதுரை 12,005, காஞ்சிபுரம் 11,807, விருதுநகர் 9,966, தூத்துக்குடி 9,159, திருவண்ணாமலை 7,832, வேலூர் 7,355, தேனி 7,898, ராணிப்பேட்டை 6,964, திருநெல்வேலி 6,578, கோவை 6,670, கன்னியாகுமரி 6,348, திருச்சி 5,129 விழுப்புரம் 4,530,சேலம் 4,622, கடலூர் 4,774, கள்ளக்குறிச்சி 4,480, ராமநாதபுரம் 3,646, தஞ்சாவூர் 4,089, திண்டுக்கல் 3,878, புதுக்கோட்டை 3189, தென்காசி 3132 ஆகியவை 3,000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.