

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர்மழையால் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
ஆண்டுதோறும் இந்த இயற்கை எழிலை ரசிக்க வரும் சுற்றுலாபயணிகள் இல்லாமல் கொடைக்கானல் மலைப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடைசீசன் மட்டுமின்றி ஆண்டுதோறும் வாரவிடுமுறை நாட்களில் சுற்றுலாபயணிகள் வருகை அதிக எண்ணிக்கையில் இருக்கும். இந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கோடை சீசன் முழுவதும் சுற்றுலாபயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து ஊரடங்கில் அரசு பல தளர்வுகளை அறிவித்தபோதும், சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலாபயணிகள் சென்றுவருவதை இன்றுவரை அரசு தடை செய்துள்ளது. இதனால் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சுற்றுலாபயணிகள் வருகை இல்லாதநிலையே கொடைக்கானலில் உள்ளது.
தற்போது கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சிலதினங்களாக தொடர் மழை பெய்துவருகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பல மலை கிராமங்கள் இருளிலும் மூழ்கியது.
இந்நிலையில் கடந்த இருதினங்களாக இதமான சாரல் மழை பெய்கிறது. மாலையில் மேகக்கூட்டங்கள் இறங்கிவந்து மலைமுகடுகள், மரங்களை தழுவிச்செல்கின்றன. இந்த இயற்கை எழிலை ஆண்டுதோறும் ரசிக்க வரும் சுற்றுலாபயணிகள் வருகை இந்த ஆண்டு தடை காரணமாக முற்றிலும்இல்லை.
நேற்று பகலில் அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியசாக இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலையாக இரவில் 13 டிகிரி செல்சியஸ் காணப்பட்டது. இதனால் இரவில் குளிர் நிலவியது.
தொடர்மழை காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதி சுற்றுலாலத்தலங்களான வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, தேவதை நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை அருவி, எலிவால் நீ்ர்வீழ்ச்சி என அனைத்து அருவிகளிலும் நீர் கொட்டுகிறது.
மலைப்பகுதிகளில் மழைபெய்தாலும், பலத்த மழை இல்லாததால் மலையடிவாரத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தே காணப்படுகிறது.