Published : 10 Aug 2020 09:39 AM
Last Updated : 10 Aug 2020 09:39 AM

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பிரீமியத் தொகை செலுத்த கால அவகாசம் தருக; வாசன்

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பிரீமியத் தொகை செலுத்த கால அவகாசத்தை அரசு நீடிக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஆக.10) வெளியிட்ட அறிக்கை:

"காவிரியில் இருந்து இந்த ஆண்டு ஜீன் மாதம் 12-ம் தேதி குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இயற்கையின் ஒத்துழைப்பாலும் அரசின் முன்னேற்பாட்டாலும் தண்ணீர் வழித்தடங்கள் தூர்வாரப்பட்டு குறித்த நேரத்தில் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று குறுவை சாகுடியை உடனடியாக தொடங்க முடிந்தது.

காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் வந்தது விவசாயிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கரோனா காலக்கட்டத்திலும் நிர்ணயிக்கப்பட்ட 3 லட்சம் ஏக்கரைத் தாண்டி 1 லட்சம் ஏக்கருக்கு அதிகமாக சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்பாராத விதமாக புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகள் நிகழ்ந்தால் விவசாயிகளை பாதுகாக்க பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு பிரிமியம் தொகை கட்டுவதற்கு கடந்த மாதம் 31-ம் தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தொடக்க வேளான்மை கூட்டுறவு சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினாலும் கணிணியின் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் கூட்டுறவு சங்கங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் பிரீமிய தொகையை விவசாயிகளால் செலுத்த முடியாமல் போனது.

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் குறுவை சாகுபடி, காப்பீடுத் திட்டத்தில் இணைய முடியாமல் கவலைக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை 1.63 லட்சம் ஏக்கருக்குதான் பயிர் காப்பீடு தொகை செலுத்தியுள்ளனர். மீதம் 1.50 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை. ஆகவே, காப்பீடு பிரீமியம் தொகை செலுத்தும் தேதியை இன்னும் 15 நாட்கள் நீட்டித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் தொடர்ந்து விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது பயிர் காப்பீடு செய்ய முடியாதவர்கள் எதிர்பாராத விதமாக இயற்கையின் சீற்றத்தால் இழப்பு ஏற்படுமானால், விவசாயிகள் பயிர் இழப்பீடு பெற முடியாமல் மிகுந்த துயரத்துக்குள்ளாவார்கள்.

ஆகவே, குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு தொகை செலுத்த கால அவகாசம் வழங்குமாறும் 2019-2020 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பு தொகையை உடனடியாக வழங்கும்படியும் தமிழக அரசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x