காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1.50 லட்சம் கனஅடியாக அதிகரித்ததால், ஐந்தருவியை மூழ்கடித்தபடி ஓடும் தண்ணீர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1.50 லட்சம் கனஅடியாக அதிகரித்ததால், ஐந்தருவியை மூழ்கடித்தபடி ஓடும் தண்ணீர்.
Updated on
1 min read

கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீரால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழைபெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளும் நிரம்பியுள்ளதால், அணைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அணைக்கு வரும்உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று படிப்படியாக உயர்ந்து மதியம் 3 மணியளவில் 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. பிரதானஅருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்தபடி தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.

கரையோரத்தில் உள்ள ஊட்டமலை, சத்திரம், ஆலம்பாடி, நாகமரை, நெருப்பூர், முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும்மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் கரையோர பகுதிகளுக்குச் செல்லாதவாறு தடுக்க போலீஸார், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டூர் அணை நிலவரம்

இதனிடையே மேட்டூர் அணை நீர்மட்டம் 75.83 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் நீர்வரத்து விநாடிக்கு 51 ஆயிரம் கனஅடியாகவும், நீர் மட்டம் 72.52 அடியாகவும், நீர் இருப்பு 34.90 டிஎம்சி-யாகவும் இருந்தது.

நேற்று காலை 8 மணியளவில் நீர்வரத்து விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணை நீர் மட்டம் ஒரே இரவில் 3 அடிக்கு மேல் உயர்ந்து நேற்று காலை 75.83 அடியானது. டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in