Published : 10 Aug 2020 07:35 AM
Last Updated : 10 Aug 2020 07:35 AM

திமுகவின் தேர்தல் பணிகளைத் தடுக்கவே இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படவில்லை: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இ-பாஸ்முறையை அதிமுக அரசு ரத்துசெய்ய மறுப்பதாக, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த தாண்டமுத்து என்ற ஆட்டோ ஓட்டுநர், தனது ஆட்டோவுக்கு எஃப்.சி பெறுவதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகஅதிகாரிகள் (ஆர்.டி.ஓ.) இழுத்தடிப்பதாகக் கூறி, ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு தனது ஆட்டோவுக்குதீ வைத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் புதிய ஆட்டோ வாங்க தாண்டமுத்துவுக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி சார்பில் நேற்று நிதியுதவி வழங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, ரங்கநாதன் எம்எல்ஏ ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “இ-பாஸ் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும். நான் இ-பாஸ் எடுக்காமல் தூத்துக்குடி சென்றதாக கூறுகிறார்கள். அப்படியெனில் ஏன் என் மீது வழக்கு தொடரவில்லை? என் மீது வழக்கு தொடர்ந்தாலாவது இ-பாஸ் குறித்து உண்மைகள் வெளிவரட்டும். சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை திமுக தொடங்கி விடக் கூடாது என்பதற்காகவே இ-பாஸ் முறையை ரத்து செய்ய அதிமுக அரசு மறுக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x