

மணலி கிடங்கில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள 34 கன்டெய்னர்களில், 10 கன்டெய்னர்கள் ஹைதராபாதில் ஏலம் எடுத்த தனியார் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறி ஏற்பட்டவிபத்தில் 138 பேர் உயிரிழந்தனர். கடந்த 6 ஆண்டுகளாக ஒரேஇடத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்ததே இந்த விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை துறைமுகத்திலும் 740 டன் எடை அளவுள்ள அமோனியம் நைட்ரேட் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த அமோனியம் கரூரைச் சேர்ந்த அம்மன் கெமிக்கல்ஸ் எனும் நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்தது.
கப்பல் மூலம் கன்டெய்னர்களில் கொண்டு வரப்பட்ட அவை, உரிய அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்டதாக சென்னை சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு, மணலியில் உள்ள சரக்குப்பெட்டக முனையத்தில் 37கன்டெய்னர்களில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கிடங்கு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் பொதுமக்கள் வசிக்கவில்லை என சுங்கத் துறை தெரிவித்தது. ஆனால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்தக் கிடங்கு அருகில் 12 ஆயிரம் பேர் வசிப்பதாக தெரிவித்துள்ளது. எனவே, அமோனியம் நைட்ரேட்வைக்கப்பட்டுள்ள கன்டெய்னர்களை 3 நாட்களுக்குள் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கன்டெய்னர்களை அங்கிருந்து இடமாற்றம் செய்யும் நடவடிக்கையில் சுங்கத்துறை இறங்கி உள்ளது. இதன்படி,ஹைதராபாதில் உள்ள தனியார் நிறுவனம் இந்த அமோனியம் நைட்ரேட்டை ஏலம் எடுத்துஉள்ளது.
இந்நிறுவனம், இந்திய அரசின் நிலக்கரி சுரங்கம் தோண்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, சுரங்கம் தோண்டும் பணியில் வெடி வைத்து தகர்க்க அமோனியம் நைட்ரேட்டை இந்நிறுவனம் பயன்படுத்துகிறது.
இந்நிலையில், மணலியில் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த 37 கன்டெய்னர்களில், 10 கன்டெய்னர்கள் லாரி மூலம் நேற்று ஹைதராபாதில் உள்ள நிறுவனத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன. மற்ற கன்டெய்னர்களையும் விரைவில் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.