

இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட 30 ஆயிரம் டன் அமோனியம் நைட்ரேட்எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. விவசாயத் தேவைக்காக இறக்குமதி செய்வதாகக் கூறி,குவாரிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உரமாக பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருள் ‘அமோனியம்நைட்ரேட்’. 130 நாடுகளில் இதன்மூலம் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளையே தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் புல்வாமா தாக்குதல், 2017 பெங்களூரு குண்டு வெடிப்பு, சென்னை சென்ட்ரலில் ரயிலில் குண்டு வெடித்தது போன்றவற்றில் அமோனியம் நைட்ரேட்தான் முக்கிய மூலப்பொருள். கடந்த7 ஆண்டுகளில் சுமார் 20 ஆயிரம் குண்டுகள் அமோனியம் நைட்ரேட் கொண்டு செய்யப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கனில் அமோனியம்நைட்ரேட் உர விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது.
அமோனியம் நைட்ரேட்மூலம் செய்யப்படும் வெடிகுண்டுகள் Improvised Explosive Devices (IED) என்று குறிப்பிடப்படுகின்றன. 10 கிலோ அமோனியம் நைட்ரேட் மூலம் சக்தி வாய்ந்த ஒருவெடிகுண்டை உருவாக்க முடியும்.உரம் என்ற பெயரில் இதை எளிதில்வாங்க முடிவதால், தீவிரவாதிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் 2012-ம் ஆண்டு முதல் அமோனியம் நைட்ரேட்டுக்கு என தனியாக பாதுகாப்பு விதிகள்உருவாக்கப்பட்டன. அமோனியம் நைட்ரேட்டை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நாக்பூரில் உள்ள மத்தியமுதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். ஆனால், தற்போது யாருக்கும் எளிதில் அனுமதிகொடுப்பதில்லை. அங்கு அனுமதி பெற்ற பின்னர் அந்தந்த மாநிலத்தில் உள்ள முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலரிடம் அனுமதி வாங்க வேண்டும்.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட்களில் கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 30 ஆயிரம் டன் அமோனியம் நைட்ரேட் எங்கே சென்றது என்பதே கணக்கில் இல்லை. விவசாயத் தேவைக்காக அமோனியம் நைட்ரேட் இறக்குமதி செய்வதாக கூறி,அதை குவாரிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் சட்டவிரோதமாக விற்பனை செய்து விடுகின்றனர்.
ஆன்லைன் வர்த்தகம் மூலமும் தற்போது அமோனியம் நைட்ரேட் விற்பனை செய்யப்படுகிறது. இவை வீரியம் குறைந்த அமோனியம் நைட்ரேட் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதன் மூலமும் வெடிகுண்டுகள் தயாரிக்க முடியும். எனவே, குண்டு தயாரிப்பதற்கான எல்லா மூலப்பொருட்களின் ஆன்லைன் விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும்.
அமோனியம் நைட்ரேட்டுடன் அயர்ன் சல்பேட் சேர்த்தால், அது வெடிக்கும் தன்மையை இழப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த கெவின் பிளெமிங் கண்டுபிடித்துள்ளார். இதை இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டுவரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.