தமிழகம் முழுவதும் பக்தர்களின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்த கந்த சஷ்டி கவசம் பாடி பாஜகவினர் வேல் பூஜை: எல்.முருகன், இல.கணேசன், எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் இல்லம் முன்பு நேற்று அலங்கரிக்கப்பட்ட முருகப் பெருமான் சிலை, வேல் ஆகியவற்றுக்கு பூஜை செய்து, அனைவரும் இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடினர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் இல்லம் முன்பு நேற்று அலங்கரிக்கப்பட்ட முருகப் பெருமான் சிலை, வேல் ஆகியவற்றுக்கு பூஜை செய்து, அனைவரும் இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடினர்.
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பாஜகவினர், இந்து அமைப்பினர் நேற்று மாலை 6 மணிக்கு தங்கள்வீடுகள் முன்பு முருகப் பெருமான் படம், வேல் வைத்து பூஜை செய்து,கந்த சஷ்டி கவசம் பாடலை பாடினர்.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் வகையில் ஒரு யூ-டியூப் சேனலில் சமீபத்தில் வீடியோ வெளியிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் பாஜகவினர், இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, அந்த யூ-டியூப் சேனல் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். ஆனாலும் இப்பிரச்சினைக்காக பாஜகவினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வீடுகள்தோறும் வேல் வழிபாடு,பாஜகவினர், முருக பக்தர்களின் வீடுகளில் வேல் படம் வரைதல்,வேல் ஸ்டிக்கர் ஒட்டுதல், குழந்தைகளுக்கு முருகன் வேடமிடும் போட்டி, கந்த சஷ்டி கவசம் ஒப்பித்தல் போட்டி என்று பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. பாஜகவினர் தங்கள் வீடுகளில் வேல் படம் வரைந்து, அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோடிக்கணக்கான பக்தர்களின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பாஜகவினர் நேற்று மாலை 6 மணிக்கு தங்கள் வீடுகள் முன்பு முருகப் பெருமான் படம், வேல் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினருடன் இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடினர்.

சென்னை கோயம்பேட்டில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் இல்லம் முன்பு கோயில்போல வடிமைக்கப்பட்டு முருகர் சிலை, வேல் ஆகியவை மலர்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. எல்.முருகன், அவரது குடும்பத்தினர், பாஜக நிர்வாகிகள் இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடி முருகப் பெருமானை வழிபட்டனர். பூஜைகள் நடத்தி அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

சென்னை தியாகராய நகரில்உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற வேல் பூஜையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் உள்ளிட்டோர் பங்கேற்று வழிபட்டனர். அனைவரும் இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடினர்.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணைத் தலைவர்வானதி சீனிவாசன், மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர்எஸ்.தணிகைவேல் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர் வீடுகள், கட்சி அலுவலகங்களில் கந்த சஷ்டி கவசம் பாடி, வேல் பூஜை செய்து முருகப் பெருமானை வழிபட்டனர்.

ஆர்எஸ்எஸ், விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்களும் நேற்று வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in