

சென்னை புறநகரில் உள்ள கிராமப் பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணமில்லாததால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் அவசரத் தேவைக்கு எடுக்க முடியாத சூழ்நிலையை பல நேரங்களில் சந்திக்க வேண்டியுள்ளதாக வாடிக்கையாளர் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் பல ஏடிஎம்களில் பாதுகாவலர்களே இருப்பதில்லை. கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் வங்கி நிர்வாகங்கள் ஏடிஎம்களில் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதுகுறித்து வாடிக்கையாளர்கள் சிலர் கூறியதாவது:
சென்னை தாம்பரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் செயல்படும் ஏடிஎம் மையங்கள் பல நாட்கள் இயங்குவதே இல்லை. வார நாட்களில் ஏடிஎம்களில் குறைவான அளவில் மட்டுமே பணம் வைக்கின்றனர். அந்த பணமும் வார நாட்களுக்குள் எடுக்கப்பட்டு விடுகின்றன. சனி, ஞாயிறுகளில் பணமே இருப்பதில்லை. எனவே, ஏடிஎம்களை அனைத்து நாட்களிலும் செயல்படவும், பணம் தடையில்லாமல் கிடைக்கவும் வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு இதனை முறையாக கண்காணிக்க வேண்டும் என்றனர்.