Published : 10 Aug 2020 07:20 AM
Last Updated : 10 Aug 2020 07:20 AM

பெண் தொழில்முனைவோருக்கு வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும்; கடன் வழங்கும் அளவை 5 சதவீதம் உயர்த்திக்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

சொந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண் தொழில்முனைவோருக்கு வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரித்து பலப்படுத்த வேண்டும். இதற்காக, தங்கள் கடன் வழங்கும் அளவை5 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ளலாம் என வங்கிகளுக்கு,ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.பெண் தொழில் முனைவோருக்கு வங்கிகளில் இதன் மூலம், எளிதாக கடன் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வங்கிகள் முதுகெலும்பாக திகழ்கின்றன. தொழில், விவசாயம், உற்பத்தி, கல்வி என பல்வேறு பிரிவுகளுக்கு வங்கிகள், கடன் வழங்கி வருகின்றன. இதன் மூலம், தனிமனிதர்களின் வாழ்க்கை மேம்படுவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பெண் தொழில்முனைவோருக்கு வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வேலைக்குசெல்வதைவிட சொந்தமாக தொழில்செய்யும் எண்ணம் பெண்களிடையே அதிகரித்து வருகிறது. பெண்கள்மத்தியில் ஏற்பட்டுள்ள கல்வி அறிவும், விழிப்புணர்வுமே இதற்குக் காரணம்.

விவசாயம், குறு, சிறு மற்றும் நடுத்தரதொழில்கள், கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சொந்தமாகதொழில் தொடங்கி நடத்தி வருகின்றனர். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்க தடையாக இருப்பது மூலதனம். அதைத் திரட்டத்தான் அவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.

குறிப்பாக, வங்கிகளில் அவர்களுக்கு கடன் கிடைப்பது என்பது பெரும்பாலும் எட்டாக்கனியாகவே உள்ளது. வங்கி அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை சரியாக அளிக்கமுடியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

எனவே, பெண் தொழில்முனைவோருக்கு வங்கிக் கடன் எளிதாக கிடைப்பதற்காக, அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

இதன்படி, வங்கிகள் பெண் தொழில்முனைவோருக்கு கடன் வழங்குவதை பலப்படுத்த வேண்டும். சிறிய காரணங்களுக்காக அவர்களுக்கு கடன் வழங்குவதை நிராகரிக்கக் கூடாது. இதற்காக,வங்கிகள் வழங்கும் கடன் அளவை, தேவைப்பட்டால் 5 சதவீதம் உயர்த்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2019 செப்டம்பர்மாதம் வரை பெண் தொழில்முனைவோருக்கு ரூ.31,578 கோடி கடன்வழங்கப்பட்டுள்ளது. கடன் வழங்குவதை அதிகரிப்பதன் மூலம், பெண் தொழில்முனைவோருக்கு அதிக அளவில் கடன் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர். ப.முரளிதரன்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x