Published : 10 Aug 2020 07:16 AM
Last Updated : 10 Aug 2020 07:16 AM

கரோனா பாதிப்பால் சிகிச்சையில் இருந்த நிலையில் நெய்வேலிக்கு தப்ப முயன்ற மூதாட்டி ஆட்டோ ஓட்டுநர் உதவியுடன் மீட்பு: சென்னை போலீஸார் விரைந்து நடவடிக்கை

சென்னை

சென்னை, எம்ஜிஆர் நகரைச்சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இரு தினங்களுக்கு முன்னர் அதேபகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒருநாள் மட்டுமே மருத்துவமனையில் இருந்த அவரை, மறுநாள் காணவில்லை.

இதனால், அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இதுகுறித்து, எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நெய்வேலியில் உள்ள மூதாட்டியின் மகளை தொடர்புகொண்ட போலீஸார், விவரத்தைக் கூறி அவர் அங்குவந்தால், உடனடியாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், தான் ஆட்டோவில் வந்து கொண்டிருப்பதாக ஆட்டோ ஓட்டுநரின் செல்போன் மூலம் மகளுக்கு மூதாட்டி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, போலீஸாரிடம் கூறிய மகள், கூடவே ஓட்டுநரின் போன் நம்பரையும் கொடுத்துள்ளார்.

இதையடுத்து ஆட்டோ ஓட்டுநரை தொடர்பு கொண்டு போலீஸார் பேசியதன்பேரில், மூதாட்டி காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார். அவரை மீண்டும் இஎஸ்ஐமருத்துவமனைக்கு போலீஸார் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுநருக்கு பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார்கூறும்போது, "வயதானவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவமனையில் சிலர் பயமுறுத்தியதாகவும், இதனால் கடைசி நேரத்திலாவது மகளுடன் இருக்கலாம் என்ற எண்ணத்தில் தப்பிச் சென்றதாகவும் மூதாட்டி தெரிவித்தார். அவருக்கு நம்பிக்கை அளித்து சிகிச்சைக்கு அனுப்பி வைத்தோம்" என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x