

மின்துறையைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு புதுச்சேரி அரசின் எதிர்ப்புத் தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அது தொடர்பான கோப்பு ஆளுநர் கிரண்பேடியால் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசம். ஆனால், புதுவை அரசின் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுப்பதை ஏற்க முடியாது என்று புதுவை அரசு தெரிவித்துள்ளது.
மேலும், புதுச்சேரியில் மின்துறை மூலம் ஏழை மக்களுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மின் விநியோகத்தைத் தனியார் மயமாக்கினால் சலுகை வழங்குவது தடைப்படும். மின்துறை ஊழியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என முதல்வர் நாராயணசாமி மத்திய அரசிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்து மின்துறை ஊழியர்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்துக்குப் பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மின் விநியோகத்தைத் தனியார் மயமாக்கும் முடிவைக் கண்டித்தும், அதனை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதனால், மின் விநியோகத்தைத் தனியார் மயமாக்குவது தொடர்பான கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு ஆளுநர் கிரண்பேடி அனுப்பி உள்ளார். மாறுபட்ட கருத்துகள் உள்ளதால் இறுதி முடிவை உள்துறை எடுக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.