Published : 10 Aug 2020 12:01 PM
Last Updated : 10 Aug 2020 12:01 PM

கரோனா பாதிப்பால் கடும் மூச்சுத் திணறல், தொடர் வாந்தி; சித்த மருத்துவத்தால் மீண்டேன்: தனியார் மருத்துவமனை ஆய்வகத் தலைமை ஆய்வாளர் மீனா பேட்டி

உயிர் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள மீனா, தனியார் மருத்துவமனை ஆய்வகத்தில் தலைமை ஆய்வாளராகப் பணிபுரிகிறார். மருத்துவமனையில் நோயாளிகளைப் பரிசோதித்து, அவர்களின் மருத்துவப் பரிசோதனை முடிவுகளைக் கொடுப்பதே இவரது வேலை. மேலும், சொந்தமாக மருந்துகள் விற்பனைத் தொழிலையும் செய்து வருகிறார்.

வயதான பெற்றோருடன் சென்னை அண்ணா நகரில் வசித்தவர், கரோனா காலப் பணி காரணமாக 3 மாதங்களாகத் தன்னைத்தானே கோடம்பாக்கத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். எல்லா விதங்களிலும் எச்சரிக்கையுடன் இருந்தவரைக் கரோனா விடாமல் தொற்றியது.

கடுமையான காய்ச்சல், இருமல், வாந்தி, மூச்சுத் திணறலுடன் அவதிப்பட்டவர் சித்த மருத்துவத்தை முழுமையாக நம்பி சிகிச்சை பெற்று, குணமடைந்துள்ளார்.

கரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவம் ஓர் அற்புதம் என்பவர் தன்னுடைய அனுபவத்தை 'இந்து தமிழ்' இணையதளத்திடம் மீனா பகிர்ந்துகொண்டார்.

சித்த மருத்துவ சிகிச்சைக்கு எப்படி வந்தீர்கள்?

ஜூலை 25-ம் தேதி லேசான காய்ச்சல் இருந்தது. சோதனையில் 26-ம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது. அப்போதே 105 டிகிரி காய்ச்சல் இருந்தது. கடுமையான இருமலுடன் வாந்தியும் தொடர்ச்சியாக வந்தது. எதையும் சாப்பிட முடியவில்லை. ஆக்சிஜன் அளவு 82-க்கும் கீழே சென்றது.

சித்த மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவெடுத்தேன். ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்து அட்மிட் ஆனேன். காய்ச்சல், இருமல், சளிக்கு எனத் தனித்தனியாக சித்த மருந்துகள் கொடுக்கப்பட்டன. தினந்தோறும் ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறை தேவைக்கேற்ப ஏதேனும் ஒரு கஷாயம் அல்லது குடிநீரை உட்கொண்டேன்.

அந்த நாள் நடுராத்திரியில் காய்ச்சல் 106 டிகிரிக்குச் சென்றது. உடனே ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு, ஊசியும் போடப்பட்டது. அரை மணி நேரத்தில் காய்ச்சல் குறைந்தது. ஆனாலும் மூச்சுவாங்க ஆரம்பித்து, ஆக்சிஜன் அளவு 80-க்கும் கீழே சென்றது. ஆக்சிஜன் அளவைக் கூட்ட சிறப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டன. என்னைக் கவனித்துக்கொள்ள தனி செவிலியர் நியமிக்கப்பட்டார். கழிப்பறைக்கும்கூட அவரே அழைத்துச் செல்வார். நுரையீரலில் கடுமையான தொற்று ஏற்பட்டிருந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. படுக்கையில் இருந்து எழுந்தாலே ஆக்சிஜன் அளவு குறைந்தது.

அந்த நேரத்தில் அச்சப்பட்டீர்களா?

உண்மையைச் சொல்லவேண்டுமெனில் ஆமாம். ஆனால் மருத்துவர் வீரபாபு மற்றும் குழுவினரின் சித்த மருத்துவ சிகிச்சை முறை என்னை அங்கிருந்து போகவிடவில்லை. அங்கே பணியாற்றிய அனைவருமே அனைத்து நோயாளிகளிடம் அன்பாக, அக்கறையாக உள்ளனர். இங்கே ஒரு குடும்ப உறுப்பினருக்குக் கொடுப்பதுபோல சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மூலிகைக் குடிநீர்

மூலிகை மருந்துகள் என்னைக் குணப்படுத்தின. 4 நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் மட்டுப்பட்டது. தொற்றும் குறைய ஆரம்பித்தது. தற்போது ஆக்சிஜன் வைக்காமல் இயல்பாகவே 98 என்ற அளவில் சுவாசிக்கிறேன்.

சித்த மருந்துகளால் என்ன மாற்றத்தை உணர்ந்தீர்கள்?

பொதுவாக காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் எடுத்தபிறகு, உடலில் அதன் தாக்கமும் ஒருவிதச் சோர்வும் இருக்கும். ஆனால் சித்த மருந்தால் எந்தச் சோர்வும் தெரியவில்லை. உடல் வலிமையானதுபோல் இருந்தது. குறிப்பாக முதல் நாள் மட்டுமே அதை மருந்துபோல உணர்ந்தேன். அதன் பிறகு, ஆற்றல் நிறைந்த சத்துபானத்தைக் குடிப்பது போலத்தான் இருந்தது. என்னுடைய அனுபவத்தில் இந்த சிகிச்சை ஓர் அற்புதம் என்றுதான் சொல்வேன்.

சித்த மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான சிறப்புக் காரணங்கள் உண்டா?

அலோபதியில் நம்பிக்கை இல்லாமல் கிடையாது. ஆனால் அதீத மருந்துகளை உட்கொள்ளாமல் இயற்கை முறையில் குணமடைய விரும்பினேன். நவீன மருத்துவத்தில் உடனடி நிவாரணம் கிடைக்க மருந்துகளைக் கொடுத்துவிடுவர். ஆனால் சித்த மருத்துவத்தில் கொஞ்சம் பொறுமையாக அதனுடன் பயணம் செய்தால் 100 சதவீதம் எந்தப் பக்கவிளைவும் இல்லாமல் சரியாகும் என்று நம்புகிறேன். அதேநேரம் இது மிகவும் தாமதமான சிகிச்சை முறை இல்லை. அதிகபட்சம் 10 நாட்களில் தொற்று சரியாகிவிடுகிறது.

அரசு மருத்துவமனை என்றாலே போதிய வசதிகள் இருக்காது என்ற பிம்பம் இங்கே உடைக்கப்பட்டிருக்கிறது. சிகிச்சை மையத்திலேயே சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 15 நாட்களாக எதற்குமே நான் வெளியே போகவில்லை. எந்த உணவையும் ஓட்டலில் வாங்கிச் சாப்பிடவில்லை. சிகிச்சையின்போது உடன் யாரும் இல்லாமல் தனியாக இருந்தாலும் தைரியமாகவே இருக்கிறேன்.

கரோனா சிகிச்சையின்போது

ஏராளமான நோயாளிகளைத் தினந்தோறும் சந்தித்திருப்பீர்கள். ஆனால் உங்களுக்கே கரோனா வந்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

இயல்பாக நான் தைரியசாலியான பெண். ஆனால் இந்தத் தருணத்தில் முழுமையாகவே பயந்துவிட்டேன். உடல் ரீதியாகவும் இருமல், வாந்தி, மூச்சுத்திணறல் என மிகவும் கஷ்டப்பட்டேன். வயதான பெற்றோரை நினைத்தும் கவலையாக இருந்தது. படித்து விழிப்புணர்வுடன் இருந்தாலும் குறைந்த வயது என்ற போதிலும் பிழைப்பேனா என்று சந்தேகப்பட்டேன். உயிர் என்பதன் மகத்துவம் புரிந்தது.

ஆனால், என்னை நானே தேற்றிக்கொண்டு, பாதிக்கப்பட்ட மற்றவர்களையும் கவனிக்க ஆரம்பித்தேன். சிலரைப் பார்க்கும்போது என்னுடைய துன்பமெல்லாம் ஒன்றுமே இல்லை எனத் தோன்றியது. சிகிச்சை மையத்தில் அளித்த ஊக்கமும் நம்பிக்கையைத் தந்தது. மெல்ல மீண்டேன்.

கரோனாவில் இருந்து மீண்ட தனியார் மருத்துவமனை ஆய்வகத் தலைமை ஆய்வாளராக மக்களுக்கும் அரசுக்கும் என்ன ஆலோசனை சொல்ல விரும்புகிறீர்கள்?

மக்கள் காய்ச்சல், இருமல் எனத் தங்களுக்கு லேசான அறிகுறிகள் ஏற்பட்டால், எனக்கெல்லாம் எதுவும் இருக்காது என்று எண்ணக் கூடாது. உடனே பரிசோதனை செய்ய வேண்டியதும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதும் அவசியம். இத்துடன் மருத்துவர் பரிந்துரைக்கும் சித்த மருந்துகளை எடுத்துக்கொண்டால் 4 முதல் 5 நாட்களிலேயே குணமாக முடியும்.

அரசு சித்த மருத்துவ சிகிச்சை முறைகளை மாநிலம் முழுவதும் பரவலாக்க வேண்டும். இதைச் சரியாக அமல்படுத்தினால், கரோனா இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை விரைவில் அடையமுடியும்'' என்றார் மீனா.

*****************************************

ஜவஹர் பொறியியல் கல்லூரி கரோனா மையத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் சித்த மருத்துவர் வீரபாபு இதுகுறித்துக் கூறும்போது, ''1 வயது முதல் 90 வயது வரையிலான நபர்களுக்கு இங்கே கரோனா சிகிச்சை அளிக்கிறோம். நீரிழிவு, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் சித்த மருத்துவத்தை நோக்கி வருகின்றனர்.

தொற்றாளருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் வீரபாபு

200 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட மையம் இப்போது 465 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. என்னுடன் 20 தன்னார்வலர்கள், 1 ஆங்கில மருத்துவர், 2 செவிலியர்கள் பணியில் இருக்கின்றனர். மாஸ்க் மட்டுமே அணிந்து பணியாற்றுகிறோம். ஆச்சரியப்படுத்தும் விதமாக எங்களில் யாருக்கும் எந்தவிதத் தொற்றும் ஏற்படவில்லை. (நோய் எதிர்ப்புச் சக்திக்காக பணியாளர்களுக்கும் கஷாயம், சிறப்பு மூலிகைத் தேநீர் வழங்கப்படுகிறது.)

சித்த மருத்துவத்தின் மீதான மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை இங்கு அனுமதிக்கப்பட்ட 3,200 பேரில் 2,700 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ளோர் சிகிச்சையில் உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 25 மாவட்டங்களில் அரசு சித்த மருத்துவ சிகிச்சையைத் தொடங்கியுள்ளது.

அதே நேரத்தில் சித்த மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் மட்டுமே மக்கள் சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்'' என்றார் மருத்துவர் வீரபாபு.

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x