

இடுக்கி நிலச்சரிவு விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேரள அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஆக.9) வெளியிட்ட அறிக்கை:
"கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 28 பேர் உயிரிழந்துள்ளது பெரும் துயரத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தோட்டத் தொழிலாளர்கள் ஆவர்.
இந்த நிலச்சரிவில் சுமார் 40 பேரைக் காணவில்லை. இவர்களது கதி குறித்த அச்சம் நிலவும் சூழலில் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூணாறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்தாலும் மீட்பு நடவடிக்கையில் மத்திய-மாநில அரசுகளும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு முதல் கட்டமாக ரூபாய் 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. பாதிப்பை முழுமையாக மதிப்பிட்ட பிறகு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இழப்புக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.
மத்திய அரசும் மாநில அரசுக்குத் தேவையான உதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஏற்பட்டுள்ள இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கேரள அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பத்திற்கும் மாநிலச் செயற்குழு சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது துயரைப் பகிர்ந்து கொள்கிறோம். காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் நலமடைய விழைகிறோம்".
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.