

மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கியில் ராஜமாலா என்ற இடத்தில் பெட்டிமுடி டிவிஷனில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் கனமழை காரணமாக நேற்று முன் தினம் (ஆக.7) அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்த தமிழகத் தொழிலாளர்கள் பலர் மாயமாகினர். 80 பேருக்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில், இதுவரை 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களின் உடல்களைத் தேடும் பணி மூன்றாவது நாளாக இன்றும் (ஆக.9) தொடர்கிறது.
இந்நிலையில், இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில், "கேரள மாநிலம் மூணாறு அருகில் உள்ள ராஜமாலா பகுதி தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தமிழகத் தொழிலாளர்கள் 80 பேருக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி, 28 பேர் இதுவரை மரணமடைந்துள்ளார்கள் என்றும், மீதிப்பேரை மீட்கும் பணி தொடருகிறது என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அந்தத் தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள கோவில்பட்டி கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், தங்கள் உறவினர்களைப் பறிகொடுத்து அங்கும் செல்ல முடியாமல் உறவினர்கள் அனைவரும் கண்கலங்கி, தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்குச் செல்வதற்கு உரிய இ-பாஸ், வாகன வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்திட கேரள அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடுமாறும், தமிழக அரசின் சார்பிலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்திட வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், தற்போது அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து, உயிரிழந்தோர் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும், மண்ணில் புதைந்து கிடக்கும் அனைவரையும் விரைந்து மீட்டிட மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.