Last Updated : 09 Aug, 2020 01:18 PM

 

Published : 09 Aug 2020 01:18 PM
Last Updated : 09 Aug 2020 01:18 PM

கரோனா வார்டுக்குச் சென்று புகார் தெரிவித்த தொற்றாளரை நேரில் சந்தித்த புதுச்சேரி அமைச்சர்; கழிவறையை தூய்மையாகப் பராமரிப்பதில் உறுதி

புதுச்சேரியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடர்பாகப் புகார் தெரிவித்த தொற்றாளரை கரோனா வார்டுக்குச் சென்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று நேரில் சந்தித்தார். கழிவறை தூய்மையாகப் பராமரிக்கப்படும் என்று அவரிடம் அமைச்சர் உறுதி தந்துள்ளார்.

புதுச்சேரியில் கரோனா தொற்றாளர்களுக்குக் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஜிப்மரிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலுள்ள கரோனா வார்டில் உள்ள குறைகளை அவ்வப்போது அங்கு சிகிச்சை பெறுவோர் தெரிவிக்கின்றனர்.

தற்போது இங்குள்ள கரோனா வார்டில் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் முதலியார்பேட்டை நாகராஜன், ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில் மருத்துவமனை குறித்து அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்திருந்தார். குறிப்பாக, "நோயாளிகளை அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. மருத்துவமனையில் கழிவறை தூய்மையாக இல்லை. நான் அனுமதிக்கப்பட்டுள்ள தளத்தில் நோயாளிகள் இரண்டே கழிவறையைப் பயன்படுத்துகிறோம்" என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில், ஏனாமில் இருந்து இன்று (ஆக.9) அதிகாலை புதுவைக்குத் திரும்பிய சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கதிர்காமம் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். பாதுகாப்புக் கவச உடை அணிந்து பார்வையிட்டார். அனைத்துத் தளங்களிலும் நோயாளிகளின் குறைகளைக் கேட்டார். மேலும், கழிவறை தூய்மையாக உள்ளதா என்றும் பார்த்தார். அதைத் தொடர்ந்து, புகார் கூறிய நாகராஜனை நேரில் அழைத்துப் பேசிவிட்டுப் புறப்பட்டார்.

இது தொடர்பாக நாகராஜனிடம் கேட்டதற்கு, "அமைச்சர் நேரில் வந்து வார்டில் விசாரித்தார். கழிவறை சீரமைப்புப் பணிகள் இரண்டு நாட்களாக நடந்ததைத் தெரிவித்தேன். சுடுநீர் தொடர்ந்து கிடைக்க உதவுமாறு கோரியுள்ளேன். உணவு தரமாக உள்ளதா? வேறு குறைகள் உள்ளதா என்று கேட்டு விவரங்களைக் குறித்துக் கொண்டார்" என்று தெரிவித்தார்.

ஆய்வு தொடர்பாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறுகையில், "கழிவறைகளைத் தூய்மையாக பராமரிப்பதை உறுதி செய்துள்ளேன். குறைகள் பற்றித் தெரிவித்ததால் வருத்தமில்லை. அதனால்தான் சரி செய்ய முடிந்தது. சில நோயாளிகள் தெரிவித்த குறைகளும் விரைவில் சரி செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x