புதுச்சேரியை நேசித்தால் தனிமனித இடைவெளியை பின்பற்றுங்கள்; முதல்வர், அதிகாரிகள் மீது கிரண்பேடி விமர்சனம்

முதல்வர் நாராயணசாமி, அரசு செயலாளர் அன்பரசு, சட்டத்துறையினர் அருகருகே நிற்கும் புகைப்படம். கிரண்பேடி இப்படத்தை வெளியிட்டு விமர்சித்துள்ளார்.
முதல்வர் நாராயணசாமி, அரசு செயலாளர் அன்பரசு, சட்டத்துறையினர் அருகருகே நிற்கும் புகைப்படம். கிரண்பேடி இப்படத்தை வெளியிட்டு விமர்சித்துள்ளார்.
Updated on
1 min read

புதுச்சேரியை உண்மையாக நேசித்தால், மக்கள் நலனில் உண்மையில் அக்கறையிருந்தால் ஒவ்வொரு அரசியல் பிரதிநிதியும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர், அதிகாரிகள் அருகருகே இருக்கும் படத்தை வெளியிட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திலுள்ள கமிட்டி அறையில் சட்டத்தொகுப்பு புத்தகம் வெளியீட்டு நிகழ்வு நேற்று முன்தினம் (ஆக.7) நடைபெற்றது. இந்நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி, அரசு செயலாளர் அன்பரசு உட்பட சட்டத்துறையினர் பலர் பங்கேற்றனர்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி: கோப்புப்படம்
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி: கோப்புப்படம்

இப்புகைப்படத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதிவிட்டு தனது கருத்தாக வாட்ஸ் அப்பில் இன்று (ஆக.9) கூறியிருப்பதாவது.:

"இது தனிமனித இடைவெளியை மீறுவதாகும். விஐபிக்கள் சமூக தளத்தில் இயங்குவதை தெளிவுப்படுத்துகிறது. சமூகத்துக்கு முன்மாதிரியாக விஐபிக்கள் திகழ வேண்டும். நான் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். தனிமனித இடைவெளி உட்பட முக்கிய விஷயங்களை கடைபிடியுங்கள். அதை மீறும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம். தங்களையும், மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும். நீங்கள் புதுச்சேரியை விரும்பினால் இதை செய்யுங்கள்.

இப்புகைப்படம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததற்குச் சான்று. புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரிப்பதற்கு இதுவே முக்கியக் காரணம். விஐபிக்கள் மற்றும் பிறரின் இதுபோன்ற விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூகத்துக்கு முன்னோடியாக தலைமையில் இருப்போர் விதிகளை முதலில் கடைபிடிக்க வேண்டும்.

மக்களால் தேர்வான பிரதிநிதிகளே தினசரி இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவதால் மருத்துவர்களும், சட்டத்தை அமலாக்கம் செய்வோரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மக்கள் செய்ய வேண்டியதை அரசியல் தலைமை செய்யாவிட்டால், கரோனாவுக்கு எதிரான யுத்தம் பின்னோக்கிதான் செல்லும். இதனால் மக்கள்தான் கஷ்டப்படுவார்கள். அரசு துறையில் கணிசமானோர் கரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொள்ள பயன்படுத்தப்படுகிறார்கள். அவற்றை நாம் இன்னும் எவ்வளவு நீட்டிக்க முடியும்? கணிசமான நிதி ஆதாரமும் பரிசோதனை, சிகிச்சைக்கு செலுத்தப்படுகிறது.

அரசியல் தலைமை, மக்களை சரியான வழியை நோக்கி வழிநடத்த வேண்டும். தவறான வழியை பின்பற்ற செய்யக்கூடாது.

உண்மையில் புதுச்சேரியை நேசித்தால், மக்கள் நலனில் உண்மையில் அக்கறையிருந்தால் ஒவ்வொரு அரசியல் பிரதிநிதியும் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை தூய்மையாக வைத்திருத்தல், இடத்தைத் தூய்மையாக பராமரித்தல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in