

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து அதிகரித்து வரும் நீர்வரத்தால் மாவட்ட நிர் வாகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி யுள்ளது.
கேரளா மற்றும் கர்நாடகா மாநில வனப்பகுதியில் பெய்யும் தொடர் மழை காரணமாக கர்நாடகா மாநில அணைகள் நிரம்பும் நிலையை எட்டியுள்ளன. இதனால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளுக்கு வரும் உபரி நீர் முழுமையாக தமிழகத்தை நோக்கி காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கடந்த மாத தொடக்கத்தில் விநாடிக்கு 2,000 கனஅடி அளவில் திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் தற்போது 1.20 லட்சம் கன அடியைக் கடந்து வெளியேற்றப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து, நீர்த் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியைக் கடந்து மேட்டூர் அணைக்கு சென்று கொண்டிருக்கிறது. நேற்று முன் தினம் மாலை நிலவரப்படி விநாடிக்கு 41 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த அளவும் சீராக உயர்ந்து வருகிறது. கர்நாடகாவில் அதிக அளவில் திறக்கப் பட்டுள்ள தண்ணீர் இன்று (9-ம் தேதி) அல்லது நாளை (10-ம் தேதி) ஒகேனக்கல்லை வந்தடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நீர்வரத்து 1 லட்சம் கன அடியைக் கடக்கும்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். தருமபுரி மாவட்டத்தில் காவிரிக் கரையோரம் அமைந்துள்ள கிராம மக்களையும், குடியிருப்புகளையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்படும். எனவே, முன்னதாகவே மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. வருவாய், பொதுப்பணி, காவல், வனம், தீயணைப்பு ஆகிய துறைகளை கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படவும், தொடர் கண்காணிப்பை மேற்கொள்ளவும், அசாதாரண நீர்வரத்து குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு உடனுக்குடன் தகவல் அளிக்கவும் அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தருமபுரி மாவட்ட காவிரிக் கரையோர பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 51,000 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று இரவு 51,000 கனஅடியாக அதிகரித்தது. இதனிடையே, கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் 65.55 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று இரவு 72.52 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 34.90 டிஎம்சி-யாக இருந்தது. டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணை நீர்மட்டம் வேக மாக உயர்ந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.