

மொடக்குறிச்சி அருகே திமுகவில் உறுப்பினர்களாக இருந்த 70 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் பாஜகவில் இணைந்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்டவடுகப்பட்டி பேரூராட்சியில், திமுகவில் உறுப்பினராகஇருந்த 70 குடும்பங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டஆண்கள், பெண்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா ஓபிசி அணியின் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.
வடுகப்பட்டி திமுக கிளை செயலாளர் தேவராஜ் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் நிர்வாகிகள் திமுகவில் இருந்துவிலகி ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
திமுகவில் இருந்து விலகிய தேவராஜ் கூறும்போது, “கந்தசஷ்டி கவசத்தை சிலர் இழிவுபடுத்தியபோது திமுக தலைவர் ஸ்டாலின் அதைப்பற்றி எந்த கண்டனமும் தெரிவிக்காமல் தனது நிலைப்பாட்டின் மூலம் இழிவு படுத்தியவர்களுக்கு ஆதரவாக உள்ளார்.
அவரின் இந்த செயல்பாடு இந்து தர்மத்தை கடைபிடிக்கும் மக்களின் மனதை மிகவும் புண்படுத்துவதாக அமைந்தது. அதனால் இதற்கு மேலும் திமுகவில் தொடரக்கூடாது என்று முடிவெடுத்து பாஜகவில் இணைந்தோம்” என்றார்.
முன்னதாக முருகரின் வேலுக்கு பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது. பாஜக மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஈஸ்வர மூர்த்தி, குரு குணசேகரன் மற்றும் மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய தலைவர் ஜெய்சங்கர் ஒன்றிய, மாவட்ட, மாநில நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.