Published : 09 Aug 2020 08:27 AM
Last Updated : 09 Aug 2020 08:27 AM

சிஐடியு மூத்த தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் இரங்கல்

சிஐடியு மூத்த தலைவர் கே.வைத்தியநாதன் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அழைக்கப்பட்ட கே. வைத்தியநாதன் நேற்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 97. மயிலாப்பூர் மயானத்தில் நேற்று மாலை அவரது இறுதி சடங்குகள் நடைபெற்றன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: சிஐடியு மூத்த தலைவரான கே.வைத்தியநாதன் வயது முதிர்வின் காரணமாகத் தனது 97-வது வயதில் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டுமிகுந்த துயரத்துக்கு உள்ளானேன். அவரது மறைவுக்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிலாளர்களின உரிமைகளுக்காகவும், முன்னேற்றத்துக்கும் தன்னலமற்ற சேவையாற்றிய போராட்டக் குணமிக்க சிறந்த தொழிற்சங்கவாதியைத் தொழிலாளர் வர்க்கம் இழந்திருப்பது பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் சிஐடியு தொழிற்சங்கத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன்: சிஐடியு முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு சிஐடியு இயக்கத்துக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சங்கம் வைத்து அந்தத் தொழிலாளிகளோடு நெருக்கமாகப் பழகி, தொழிற்சங்க இயக்கத்தை குறிப்பாக சிஐடியுவை வளர்த்த பெருமை வைத்தியநாதனைச் சாரும். மிகவும் எளிமையானவர். கைது, சிறை என பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டவர்.

திருமணம் செய்து கொள்ளாமல் சிஐடியு இயக்கத்துக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்தவர். அவரது மறைவால் துயருற்றிருக்கும் தோழர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x