Published : 09 Aug 2020 08:22 AM
Last Updated : 09 Aug 2020 08:22 AM

கரோனா காலத்தில் பவுன் விலை ரூ.11 ஆயிரம் அதிகரிப்பு; மாதாந்திர சீட்டு திட்டத்தில் சேர்ந்த 1 கோடி வாடிக்கையாளர்கள் பயன்: பழைய விலைக்கே நகை கிடைப்பதால் மகிழ்ச்சி

கரோனா பேரிடர் காலத்தில் தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.11 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. ஆனால், மாதாந்திர நகைச் சீட்டு திட்டங்களில் சேர்ந்துள்ள சுமார் 1 கோடி பேர் பழைய விலைக்கே தங்கம் வாங்கி பயனடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனாபாதிப்பால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. இதேபோல, பங்குச் சந்தையிலும் நிலையற்ற தன்மை நீடிப்பதால், தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

மற்றொருபுறம், கரோனா பாதிப்பும் நாளுக்குநாள் அதிகரிப்பதால் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பதற்ற நிலையும் நீடிக்கிறது. இதனால், தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உயர்வை தொட்டு வருகிறது.

கரோனா ஊரடங்குக்கு முன்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ரூ.11 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்து, ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இனி வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கைகொடுக்கும் நகை சீட்டு

நம் நாட்டில் திருமணம், வளைகாப்பு, காதுகுத்து எனஅனைத்துவிதமான சுப காரியங்களுக்கும் மக்கள் தங்கம் வாங்குவது வழக்கம். நகைக் கடைகளில் ஆண்டு முழுவதுமே நகை விற்பனை நடந்தாலும் பண்டிகை, முகூர்த்த நாட்களில் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும்.

வாடிக்கையாளர்களை நகைக் கடைகளின் பக்கம் ஈர்ப்பதில், மாதாந்திர சீட்டுக்கு முக்கிய பங்கு உண்டு. சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற பெரிய நகரங்களில் பிரபலமாக உள்ள நகைக் கடைகளில், நகைச் சீட்டு விற்பனைதான் பிரதானமாக உள்ளது. இவ்வாறு, தமிழகத்தில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் தங்களது மாத வருமானத்தில் சிறிய தொகையை நகைச் சீட்டு கட்டி வருகின்றனர். கடந்த பல மாதங்களாக நகைச் சீட்டு கட்டி வந்தவர்கள் தற்போது பழைய விலைக்கே தங்க நகைகளை வாங்குவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து இத்துறையை சேர்ந்தவர்கள் கூறியதாவது:

சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார்: கரோனா பாதிப்பால் தங்கத்தில் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் தங்கம் விலை 50 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

தங்கம் சேமிப்பு என்பது தமிழக மக்களிடம் எப்போதுமே தவிர்க்க முடியாததாக உள்ளது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள்கூட தங்கள் வசதிக்கேற்ப மாதாந்திர நகைச் சீட்டு கட்டுகின்றனர். இவ்வாறு தமிழகத்தில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் நகைச் சீட்டு கட்டிவருகின்றனர். இவர்கள் பழைய விலைக்கே தங்கம் வாங்க முடியும். இதற்கு, சேதாரம், செய்கூலி இல்லை. ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மேலும், சீட்டு சேரும்போது, சிறப்பு பரிசு போன்ற சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. தற்போதும்கூட, நகைச் சீட்டு கட்டியவர்கள் விலை உயர்வால் பாதிக்கப்படாமல் தங்கம் வாங்கிச் செல்கின்றனர்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் துணை தலைவர் பி.ஏ.ரமேஷ் பாபு: முன்பெல்லாம் சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்தாலும், ரூபாய் மதிப்பு வலுவாக இருந்ததால், தங்கம் விலை ஓரளவு கட்டுக்குள் இருக்கும். தற்போது கரோனா பாதிப்பால் தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகிய காரணங்களால், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்துள்ளது.

இனி வரும் நாட்களில் தங்கம்விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் ஒரு பவுன் ரூ.50ஆயிரத்தை நெருங்க வாய்ப்புஉள்ளது. தங்கம் இறக்குமதியை குறைத்து, மக்களிடம் முடங்கியுள்ள 25 ஆயிரம் டன் தங்கம் புழக்கத்தில் வரும்போதுதான் விலை குறையும். இது நம் நாட்டின் அந்நியச் செலாவணியை சேமிப்பதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x