Published : 09 Aug 2020 08:18 AM
Last Updated : 09 Aug 2020 08:18 AM

கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம்; திமுகவில் இருந்து என்னை நீக்கியது இயற்கை நீதிக்கு விரோதமானது: மு.க.ஸ்டாலினுக்கு கு.க.செல்வம் கடிதம்

என்னை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கியது இயற்கை நீதிக்கு விரோதமானது என்பதால், சஸ்பெண்ட் தொடர்பான நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சியில் இருந்து அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏ கு.க.செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் டெல்லி சென்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். இதையடுத்து அவரை திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அத்துடன் உங்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்று கேட்டு திமுக சார்பில் நோட்டீஸும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கு.க.செல்வம் நேற்று அனுப்பிய விளக்கக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தங்களுடைய ஆகஸ்ட் 5-ம் தேதியிட்ட நோட்டீஸ் கிடைக்கப் பெற்றது. அதில், நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் பதில்அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒருதலைபட்சமானது..

ஆனால், நடவடிக்கை எடுத்துஎன்னை தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளீர்கள். ஆகவே, என் பதில் கிடைக்கும் முன்னரேநான் குற்றவாளி என்று ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. என்னை தற்காலிகமாக நீக்கிவைத்தது இயற்கை நீதிக்கு விரோதமானது. எனவே, தங்களின் தற்காலிக நீக்கத்தை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், தங்கள் நோட்டீஸுக்கு நான் விவரமாக விளக்கம் அளிப்பதற்கு சில தகவல்கள் தேவைப்படுகின்றன. தாங்கள் அனுப்பிய நோட்டீஸில் விவரங்கள் இல்லாமல் மேலோட்டமாக அனுப்பப்பட்டுள்ளன.

தங்கள் நோட்டீஸில் நான் பொய்யான தகவல்களை சொன்னதாக நோட்டீஸில் முதலாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால், நான் என்ன தகவல்களை பொய்யாக சொன்னேன் என்று குறிப்பிடப்படவில்லை. நான் கூறியவை அனைத்தும் பொய் என்று நானே அனுமானிக்கும் நிலையில் என்னை வைத்து குற்றம் சாட்டியுள்ளீர்கள்.

அதுபோன்று இரண்டாம் குற்றச்சாட்டில் நான் அவதூறாக பேசியதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால், நான் பேசியதில் எது அவதூறுகள் என்று குறிப்பிடப்படவில்லை. இரண்டு இணைப்புகளை அனுப்பி என்னைஅனுமானிக்க சொல்லியிருக்கிறீர்கள்.

திமுகவைச் சேர்ந்தவர்கள் மற்ற கட்சித் தொண்டர்களையோ, தலைவர்களையோ சந்திக்கக் கூடாது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பதுதான் அண்ணா அவர்களது கோட்பாடு.

நம் தலைவர் கருணாநிதியை பாஜகவைச் சேர்ந்த பாரத பிரதமர் நேரில் வந்து பார்த்தது அனைவருக்கும் தெரியும். எனவே, கட்சியின் மாண்பை நான் மீறியதாக கூறுவது சரியல்ல. இயற்கை நீதிக்கு விரோதமானது.

எனவே, தங்கள் நோட்டீஸை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். சட்டப்படி விசாரணை வைத்து மேற்படி பத்தியின் நான் கேட்ட விவரங்களை அளித்தால் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளேன் என்று கடிதத்தில் கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x