Published : 09 Aug 2020 07:50 AM
Last Updated : 09 Aug 2020 07:50 AM

அமோனியம் நைட்ரேட் பதுக்கப்பட்டுள்ளதா?- தமிழகம் முழுவதும் 470 இடங்களில் சோதனை

அமோனியம் நைட்ரேட் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 470 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ளதுறைமுக கிடங்கில் 6 ஆண்டுகளாக பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் கடந்த 4-ம் தேதி வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த வெடி விபத்தில்பெய்ரூட் நகரமே உருக்குலைந்துள்ளது.

பெய்ரூட் வெடி விபத்தை தொடர்ந்து, அமோனியம் நைட்ரேட்ரசாயனப் பொருள் வைக்கப்பட்டுள்ள இடங்களை சுற்றி வசிப்பவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

சென்னை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக வைக்கவும், அதை உடனே அங்கிருந்து அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அமோனியம் நைட்ரேட் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று தமிழகம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். போலீஸார், தீயணைப்பு துறையினர், வெடிபொருள் கட்டுப்பாட்டுபிரிவு அதிகாரிகள், வருவாய் துறைஅதிகாரிகள் இணைந்து இந்தசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

குவாரிகள், உரக் கடைகள், உர குடோன்கள், சந்தேகத்துக்குரிய இடங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

நேற்று முன்தினம் தொடங்கிய சோதனை நேற்று வரை நீடித்தது. தமிழகம் முழுவதும் 470 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதில் 6 இடங்களில் மட்டும் முறையான அனுமதி இல்லாமல் அமோனியம் நைட்ரேட் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அது உரத்துக்காக பயன்படுத்தப்படும் அமோனியம் நைட்ரேட் என்பது போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

உரப் பொருள் வெடிக்குமா?

உரமாகப் பயன்படுத்தப்படும் அமோனியம் நைட்ரேட், சுரங்கம், குவாரி போன்ற இடங்களுக்கான வெடிபொருள் தயாரிக்கவும் பயன்படுகிறது. வெறும் அமோனியம் நைட்ரேட் வெடிக்காது. ஆனால், வேறு ரசாயனப் பொருட்களுடன் சேரும்போது பயங்கரமாக வெடிக்கக் கூடியது. அதிக அளவில் குவித்து வைக்கும்போது தீப்பிடித்தும் விபத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்தியாவில் நடந்த பல்வேறு வெடிகுண்டு தாக்குதல்களில் ஆர்டிஎக்ஸ், டிஎன்டி போன்றவற்றுடன் அமோனியம் நைட்ரேட்டை இணைத்து தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x