

சுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல்துறையினரின் முதல்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. இதில் அனைவரும் முகக் கவசம் அணிந்து பங்கேற்றனர்.
நாட்டின் 74-வது சுதந்திர தினம் வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறார்.
இந்நிலையில், இதற்கான முதல்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக தலைமைச் செயலகத்தை சுற்றி நேற்று காலை 6.30 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடி மரச்சாலையில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருந்தது.
ஒத்திகையின்போது, தமிழக காவல் துறையின் ஆயுதப்படை பிரிவு, மகளிர் காவல் பிரிவு, குதிரைப் படை பிரிவினர் பங்கேற்ற
னர். கரோனா தொற்று காரணமாக அனைவரும் முகக் கவசம் அணிந்து பங்கேற்றனர். அதன் பின், அணிவகுப்பு மரியாதையை ஜீப்பில் வந்து முதல்வர் பழனிசாமி ஏற்பது போன்று, முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் உள்ள அதிகாரி ஒருவரை வைத்து ஒத்திகை பார்க்கப்பட்டது.
தொடர்ந்து, நாளை (ஆகஸ்ட் 10-ம் தேதி) மற்றும் 13-ம் தேதிகளில் ஒத்திகை நடத்தப்படுகிறது. அந்த நாட்களிலும் காலை 6.30 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.