

மாநகராட்சி சார்பில் சென்னை அயனாவரம் பகுதியில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இதற்கு முன்பு திருமணம், இறப்பு, அவசர மருத்துவ சிகிச்சை ஆகிய 3 காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இ-பாஸ் வழங்குவது எளிமைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பணி சார்ந்த வகையின்கீழ், வணிகம், பணியில் சேருவது, நேர்முகத் தேர்வில் பங்கேற்பது உள்ளிட்ட காரணங்களுக்காகவும் இ-பாஸ் வழங்கப்படுகிறது.
மேலும் இ-பாஸ் கோரி விண்ணப்பிக்கும் நபர், அவர் கூறும் காரணத்துக்கான ஆவணங்களை இணைக்காமல் இருந்தால், அவரைத் தொடர்புகொண்டு தொடர்புடைய ஆவணத்தை இணைக்குமாறு அறிவுறுத்தும் பணியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் சென்னை திரும்பவும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இ-பாஸ் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளதால், தற்போது வழக்கத்தை விட 30 சதவீதம் அதிகமாக இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் இ-பாஸ் விண்ணப்பிக்கும் நபர் கட்டாயம் தனது ஆதார் அட்டை விவரங்களை இணைக்க வேண்டும்.
சென்னையில் கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த மாதம் 65 நாட்களாக இருந்த தொற்று இரட்டிப்பாகும் காலம் 72 நாட்களாக அதிகரித்துள்ளது. வட சென்னையில் தொற்று இரட்டிப்பாகும் காலம் தற்போது 120 நாட்களாக உள்ளது.
அண்ணாநகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் தொற்றைக் கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி செயல்படுத்தி வரும் தடுப்பு திட்டங்கள் அனைத்தும் அடுத்த 3 மாதங்களுக்கு நீடிக்கும்.
சென்னையில் இதுவரை 16 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 12 லட்சம் பேர் தங்களது தனிமைப்படுத்திக்கொள்ளும் காலத்தை நிறைவு செய்துள்ளனர். தற்போது நாளொன்றுக்கு 14 ஆயிரம் பரிசோதனைகள் என்ற நிலையை எட்டி இருக்கிறோம். இதில் தொற்று உறுதி செய்யப்படுவோர் 8 சதவீதமாக உள்ளனர். இதை 5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்து பணிகளை மேற் கொண்டு வருகிறோம். இம்மாத இறுதிக்குள் 6 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சென்னையில் போதுமான அளவு இறைச்சிக் கடைகள் உள்ளன. அதனால் பொதுமக்கள் சனிக்கிழமைகளில் கடைகளுக்கு கூட்டமாக செல்வதையும், அதிக அளவில் இறைச்சி வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். சற்று மலிவாக கிடைக்கிறது என்பதற்காக வெகுதூரம் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.