

திருமழிசை சந்தையில் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை கிலோ ரூ.35ஆக நீடிக்கிறது. இதனால், சென்னையில் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.50-க்கு விற்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக மே, ஜூன் மாதங்களில்தான் தக்காளி விலை உயர்ந்து ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குறையத் தொடங்கும். தற்போது ஆகஸ்ட் மாதம் பிறந்தும் தக்காளி விலை உயர்ந்தே உள்ளது.
நேற்று மொத்த விலை சந்தையில் தக்காளி கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்டதால், சென்னை நகரின் சில்லறை விற்பனை சந்தைகள் மற்றும் கடைகளில் கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்டது.
திருமழிசை சந்தையில் மற்ற காய்கறிகளான வெங்காயம், முள்ளங்கி தலா ரூ.15, சாம்பார் வெங்காயம், கேரட் தலா ரூ.45, கத்தரிக்காய், பாகற்காய், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் தலா ரூ.30, அவரைக்காய், முருங்கைக்காய், பீன்ஸ் தலா ரூ.40, வெண்டைக்காய் ரூ.20, முட்டைக்கோஸ், முள்ளங்கி தலா ரூ.8 என விற்கப்பட்டு வருகின்றன.