

கடல் அரிப்பால் மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ஜியோ டியூப் முறை சிறப்பாக பலன் தருவதாக தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இவற்றில், ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடற்கரையை ஒட்டியுள்ள மீனவ கிராமங்களில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, கடற்கரையை ஒட்டிதான் படகுகளை நிறுத்தி வைக்கின்றனர்.
இந்தச் சூழலில், ஆண்டுதோறும் சில கடற்கரை மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவர்களின் வீடு, படகு உள்ளிட்டவை பாதிக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இவற்றுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடல் அரிப்பைத் தடுக்க ஜியோ டியூப் முறையில் அலையின் வேகத்தை கட்டுப்படுத்துவது, நேர்கல் சுவர் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மீன்வளத் துறை அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
இவற்றில், ஜியோ டியூப் முறைதான் சிறப்பாக செயல்படுவதாக தமிழக அரசிடம் மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மீன்வளத் துறைஅதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடல் அரிப்பை தடுக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜியோ டியூப் முறை வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் ஜியோ டியூப் முறையைப் பயன்படுத்தினால் கடல் அரிப்பால் மீனவர்கள் பாதிக்கப்படுவதில் இருந்து முழுமையான தீர்வு கிடைக்கும் என்று அரசுக்கு தெரிவித்துள்ளோம்.
இதன் அடிப்படையில்தான் விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையத்தில் ஜியோ டியூப் முறையில் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் ஜியோ டியூப் முறையை பயன்படுத்த அரசு தெரிவிக்கவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.