Published : 09 Aug 2020 07:14 AM
Last Updated : 09 Aug 2020 07:14 AM

புதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்

கனிமொழி கருணாநிதி

இந்தியா கரோனாவோடு போராடிக் கொண்டிருக்கும்போது, சத்தமில்லாமல் நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் ஒரு கல்வித் திட்டத்தை மத்திய பாஜக அரசு அவசரமாக அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தியா பல்வேறு மொழி, இனம், பண்பாடு, கலாச்சாரம் ஆகிய கூறுகளைக் கொண்டது. ஒவ்வொரு இனத்துக்கும், ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் இருக்கும்தனித்துவமான கலாச்சாரம் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான், நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், கல்வியை மாநிலப்பட்டியலில் வைத்தனர். நெருக்கடி நிலை காலத்தில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. தற்போது நாடுமுழுக்க பொது முடக்கம் இருக்கும் நிலையில், கல்வியை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் மாற்றும் நோக்கத்தோடு கொண்டு வரப்படுவதுதான் புதிய கல்விக் கொள்கை திட்டம்.

வெளித் தோற்றத்துக்கு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தும் திட்டமாக தெரிந்தாலும், இது பார
தூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. கல்வி திட்டத்தில், கற்பித்தல் முறையில், கல்வியின் நோக்கத்தில் மாற்றம் வேண்டும் என்பதிலும் அடுத்த தலைமுறைக்கான கல்வி, எதிர்கால அறிவியல் மாற்றங்கள், சிந்தனைமுறைகள் இவற்றை உள்ளடக்கியதாக மாறும் வாழ்வாதார மதிப்பீடுகளை, வாய்ப்புகளை கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால், மாற்றம் என்ற பெயரில் இந்துத்துவ மதிப் பீடுகளை திணிப்பதை ஏற்க முடியாது. புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் தொடக்கத்திலேயே மத்திய அரசு, தனது நோக்கம் என்ன என்பதை தெளிவுபடுத்தி விடுகிறது.

தொடக்கக் கல்வி முறை, பாடத்திட்டம், தேர்வு முறை அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்து விடும் என்று குறிப்பிடப்படுகிறது. பின்தங்கிய மாநிலங்கள், எந்த மாநிலங்களில் ஆரம்பக் கல்வி முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லையோ, அங்கே இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவதைக் கூட புரிந்துகொள்ளலாம் தமிழ்நாடு, கேரளா போல தொடக்கக் கல்வியை சிறப்பாக செயல்படுத்தி வரும் மாநிலங்கள், தங்களின் உரிமையை எதற்காக மத்திய அரசிடம் விட்டுக் கொடுக்க வேண்டும்?

வரும் 2030-ம் ஆண்டுக்குள், உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் வீதத்தை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று கூறப்படுகிறது. தமிழகம் போன்ற மாநிலங்களில் உயர்கல்வி சேர்க்கை வீதத்தில் 50 சதவீதத்தை எப்போதோ தொட்டுவிட்டோம். தமிழகம், சிக்கிம் போன்ற இலக்கை கடந்த மாநிலங்களுக்கு இவர்கள் என்ன திட்டம் வைத்திருக் கிறார்கள்.

வரும் 2025-ம் ஆண்டுக்குள், குறைவான எண்ணிக்கையிலான மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடிவிட்டு, ஐந்து முதல் பத்து
மைல்கள் வரையில், ஒரு பள்ளி வளாகத்தை அமைத்து, அதில் அனைத்து மாணவர்களையும் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்
கிறது புதிய கல்விக் கொள்கை. கிராமங்களில், மலைப் பகுதிகளில் பள்ளிகள் தூரமாக இருப்பதால், மாணவர்களை குறிப்பாக மாணவிகளை பள்ளியை விட்டு நிறுத்தும் நிலை இருக்கிறது.

இதன் காரணமாகத்தான் தமிழகத்தில் கிராம அளவில் தொடக்க நிலைப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. கோவை மாவட்டம் வால்பாறையில், 76 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஒரு பள்ளி, 2017-18-ம் கல்வியாண்டுடன் மூடப்பட்டது. தேயிலைத் தோட்ட தொழிலாளியான ராஜேஸ்வரியின் 6 வயது குழந்தைக்காக அந்த பள்ளியை மீண்டும் திறக்க அரசு உத்தரவிட்ட வரலாறும் தமிழகத்
தில் உண்டு. இதுபோன்ற பள்ளிகளைத்தான் மூடச்சொல்லி புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.

மிக நீண்ட ஆய்வுக்குப் பின் கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு வகுப்பின் இறுதியில் தேர்ச்சி அல்லது தோல்வி என்பது மாணவர்களின் மீது அழுத்தத்தை உருவாக்கும் என்பதை ஆராய்ந்தே, கல்வி உரிமைச் சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் தடையின்றி தேர்ச்சியடைய வகை செய்யும்படி இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு, ஜனவரி 2019-ல், எட்டாம் வகுப்பு வரை தடையின்றி தேர்ச்சி என்ற விதியை திருத்தியது.

புதிய கல்விக் கொள்கையில் 3, 5 மற்றும் 8-ம் வகுப்பில் பொதுத் தேர்வு என்ற புதிய கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. 3-ம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு என்றால், மாணவர் எப்படி படிப்பைத் தொடர்வார்கள்? புதிய கல்விக் கொள்கை, மாணவர்களை படிக்க தூண்டுகிறதா? இல்லை, படிப்பை கைவிட்டு தொழில் செய்யச் சொல்லி ஊக்குவிக்கிறதா?

தனியார் பள்ளிகள் தொடங்க, தமிழகம் போன்ற மாநிலங்களில் கடுமையான விதிகள் உள்ளன. ஆனால் புதிய கொள்கை, புதிய பள்ளிகள் தொடங்குவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த பரிந்துரைக்கிறது.

மும்மொழிக் கொள்கை பரிந்துரை

அடுத்ததாக, மும்மொழிக் கொள்கையை பரிந்துரைக்கிறது புதிய கல்விக் கொள்கை. இந்தியை கட்டாயமாக்கவில்லை என்கிறார் கள். சரி. ஆனால், சமஸ்கிருதம் ஒரு தொன்மையான மற்றும் நவீனமான மொழி. ‘‘கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளின் இலக்கியங்களை எல்லாம் ஒன்றாக சேர்த்துப்பார்த்தால்கூட அதைவிட அதிகமான பொக்கிஷங்களை கொண்டுள்ளது சமஸ்கிருதம்’’என்று கூறிவிட்டு, ‘‘சமஸ்கிருதம், பள்ளிகளின் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படும்.

சமஸ்கிருத புத்தகங்கள், தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி அளவில், எளிய முறையில் எழுதப்பட்டு, சமஸ்கிருதம் கற்பிக்கப்படும்’’ என்று கூறுகின்றனர்.

சமஸ்கிருதத்துக்கு இத்தகைய முக்கியத்துவம் ஏன்? மாறாக, பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தமிழ்மொழி இன்றும் உலகெங்கும் உள்ள தமிழர்களின் பேசுமொழி, எழுத்து மொழியாக இருந்து வருகிறது. பாரபட்சமற்ற ஓர் அரசு, ஆய்வுகள், இலக்கியம், கவிதை,
இசை, நிகழ்த்துக் கலைகள் என்ற 2000 ஆண்டுகால வரலாற்றை கொண்ட தமிழ் மொழியை, இன்னும் உயிரோட்டமாக கோடிக்
கணக்கான மக்கள் பயன்படுத்தும் மொழியாகிய தமிழ்மொழியை வளர்க்க வேண்டுமா? அல்லது மக்கள் பயன்பாட்டில் இல்லாத
ஒரு மொழியை திணிக்க வேண்டுமா?

“கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன என்பதாலேயே எல்லோருக்குமான கல்வி இருக்கிறது என்று நினைக்க முடியாது” என்றார் மால்கம். கல்லூரிகள் பல்கலைக்கழகங்களிடம் அங்கீகாரம் பெறும் முறையை ரத்து செய்து, கல்லூரிகள் தன்னாட்சி நிறுவனங்களாக மாறுவதற்கு வகை செய்கிறது புதிய கல்விக் கொள்கை. இது மிகப்பெரிய அளவில் தனியார் வசம் கல்வி நிறுவனங்கள் மாறுவதற்கும், ஏழை எளிய மக்களுக்கு கல்வி, உயர்கல்வி எளிதில் கிடைக்காது என்ற நிலையில் சென்று முடியும். கல்லூரிகள் தன்னாட்சி நிறுவனங்களாக உருவெடுத்தால், பாடத்திட்டம் உருவாக்குவதில் எந்த கட்டுப்பாடும் இல்
லாமல் போய்விடும். காலப்போக்கில் வணிகத் தின் காலில், தரம் பலி கொடுக்கப்படும்.

‘நீட்’டை கொண்டுவந்து மருத்துவப் படிப்பை மேல்தட்டு நகர்ப்புற மாணவர்களுக்கானதாக மாற்றியது மத்திய அரசு. மேலும் இன்று புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால், கிராமத்தில் இருந்து, அரசுப் பள்ளிகளில் படித்து வரும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரிக்குள் காலே எடுத்து வைக்க முடியாத ஓர் சூழல் ஏற்படும்.

நுழைவுத் தேர்வு என்பது அவர்களின் கல்லூரி கனவை முழுமையாக முடக்கிவிடும். புதிய கல்விக் கொள்கை ஆபத்தானது என்பதை முன்னாள் முதல்வர் கருணாநிதி உணர்ந்து, “புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை தமிழகத்துக்குள் புகுந்து, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை’ நாசப்படுத்தவோ, காலம் காலமாக நாம் போற்றி வரும் சமூக நீதி மற்றும் சமநீதிக் கொள்கைகளுக்குக் கேடு ஏற்படுத்தவோ அனுமதிக்கக் கூடாது” என்று எச்சரிக்கை விடுத்தார்.

அந்த எச்சரிக்கை இன்றும் பொருந்துகிறது. இந்த புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தும் இந்தக் கட்டத்திலேயே நாம் ஒன்றுபட்டு இதை எதிர்க்க வேண்டும்.

கட்டுரையாளர்: மக்களவை உறுப்பினர், தூத்துக்குடி தொகுதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x