ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா ஊரடங்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா ஊரடங்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Updated on
1 min read

ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தும் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலை தடுக்க மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஊரடங்கில் தளர்வு அமலானது. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு எதுவுமில்லா முழு ஊரடங்கு கடந்த ஜூலை மாத ஊரடங்கிலும் தற்போது ஆகஸ்டு 7-ம் கட்ட ஊரடங்கிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

7-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31 வரை நீட்டித்த தமிழக அரசு, மாநிலங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்கு இடையிலும் பயணிக்க இ பாஸ் பெற வேண்டும் எனவும், இம்மாதம் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த மனோகரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கை நீட்டித்த மத்திய அரசு, மாநிலங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்கு இடையிலும் பயணிக்க பாஸ் பெற தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசின் உத்தரவு உள்ளது.

மேலும், ஞாயிற்று கிழமைகளில் பொது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதால், முந்தைய நாளான சனி கிழமைகளில் கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்து விடுவதால், தனிமனித இடைவெளி அர்த்தமற்றதாகி விடுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in