Published : 08 Aug 2020 08:25 PM
Last Updated : 08 Aug 2020 08:25 PM

கடலுக்குள் கந்த சஷ்டி படிக்கச் சென்ற பாஜகவினர்: போலீஸ் தடுத்ததால் கரையிலேயே கவசம் படித்தனர்

சென்னை

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் கந்த சஷ்டி கவசம் படிப்பதற்காகச் சென்ற பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பினர். இதனால் பாஜகவினர், கடற்கரையிலேயே கந்த சஷ்டி கவசம் படித்துவிட்டுக் கலைந்து சென்றனர்.

தமிழகம் முழுவதும் இந்துக்கள் அனைவரும் நாளை மாலை 6 மணிக்குத் தங்கள் வீட்டு வாசலில் கந்த சஷ்டி கவசம் படித்துப் பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்த நிலையில், கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் காசிமேடு மீனவர்கள் நாளை மாலைக்குள் வீடு திரும்ப முடியாது என்பதால் இன்றே அவர்கள் கையில் கந்த சஷ்டி புத்தகங்களைக் கொடுத்து அனுப்பும் நூதனப் போராட்டம் ஒன்றை அறிவித்தது தமிழக பாஜக மீனவரணி.

இதன்படி, பாஜக மீனவரணித் தலைவர் சதீஷ்குமார், பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், பாஜக கலை - இலக்கிய அணியின் மாநிலத் தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் தொண்டர்கள் புடைசூழ இன்று காசிமேடு துறைமுகத்துக்கு வந்தனர். முன்னதாக அங்கே முருகப்பெருமானின் 15 அடி உயர கட் அவுட்டும் கொண்டுவரப்பட்டது. கடவுள் முருகப்பெருமான் கட் அவுட்டைப் படகில் ஏற்றி கடலுக்குள் செல்லத் தயாரான பாஜகவினரை போலீஸ் தலையிட்டு தடுத்து நிறுத்தியது. அதனால் கடற்கரையிலேயே முருகப்பெருமான் கட் அவுட்டை வைத்து, கந்த சஷ்டி கவசம் படித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக மீனவரணியின் மாநிலத் தலைவர் சதீஷ்குமார், “தமிழகம் முழுவதும் இந்துக்களுக்கு விநியோகம் செய்வதற்காக பத்து லட்சம் கந்த சஷ்டி புத்தகங்களை பாஜக தலைமை அச்சடித்துக் கொடுத்திருக்கிறது. கடலுக்குச் செல்லும் மீனவர்கள் நாளை மாலை வீட்டில் இருக்க மாட்டார்கள் என்பதால் அவர்கள் கடலிலேயே கந்த சஷ்டி கவசம் படிக்க வசதியாக அவர்களுக்குக் கந்த சஷ்டி புத்தகங்களைக் கொடுப்பதற்காகச் சென்றோம்.

அத்துடன், முருகன் கட் அவுட்டைப் படகில் வைத்து நாங்களும் கடலிலேயே இன்று கந்த சஷ்டி கவசம் படிப்பதாக இருந்தோம். ஆனால், அப்படியெல்லாம் செய்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை வரும் என்று சொல்லி எங்களைக் கடலில் இறங்கவிடாமல் தடுத்துவிட்டது போலீஸ். அதனால், கடற்கரையிலேயே நின்று கந்த சஷ்டி கவசத்தைப் படித்துவிட்டு வந்தோம்” என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x