

மேலூர் தெற்குத்தெரு கிராமம் உள்ள தர்மசானப்பட்டி கிராமம் வரை பொதுச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை 10 வாரத்தில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலூர் தெற்குதெருவைச் சேர்ந்த எஸ்.கே.ஜெகநாதன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் இருந்து தர்மசானப்பட்டி கிராமம் வரை பொதுச்சாலையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சீரமைக்கக்கோரி 2012 முதல் அதிகாரிகளுக்கு மனு அளித்து வருகிறேன். என் மனு அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதை எதிர்த்து வள்ளியம்மாள் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரித்து ஆக்கிரமிப்பை அகற்ற 2013-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அதிகாரிகள் சாலையை அளவீடு செய்து 39 ஆக்கிரமிப்பாளர்களுக்கு 28.6.2014-ல் நோட்டீஸ் கொடுத்தனர்.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி சிலர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம் சட்டப்படி நோட்டீஸ் கொடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம் என 27.7.2017-ல் உத்தரவிட்டது.
அதன்பிறகு ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பு காரணமாக சாலையில் பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இந்தச் சாலையை விரிவாக்கம் செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
எனவே, தெற்குதெரு கிராமத்தில் இருந்து தர்மசானப்பட்டி வரை பொதுச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை சீரமைக்க உத்தரவிட வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றாமல் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்திநயாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜெ.பாலமீனாட்சி வாதிட்டார்.
பின்னர் நீதிபதிகள், தெற்குதெரு கிராமம் முதல் தர்மசானப்பட்டி கிராம் வரை பொதுச்சாலையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற மேலூர் வட்டாட்சியர், மேலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், தெற்குத்தெரு ஊராட்சித் தலைவர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை 10 வாரத்தில் முடிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.