

தமிழகம் முழுவதும் பாஜக சாலையில் நாளை வேல் பூஜை நடத்தப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலையை சுற்றி விளக்கேற்ற பாஜகவினர் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக மதுரை மாநகர் பாஜக தலைவர் கே.கே.ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
தமிழ் கடவுள் முருகப்பெருமானையும், கந்த கஷ்டி கவசத்தையும் அவதூறாக பேசி தமிழக மக்களின் மதநம்பிக்கையையும், பக்தி உணர்வையும் கொச்சைப்படுத்தியவர்களை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (ஆக. 9) மாலை 6 மணிக்கு வேல் பூஜை நடத்தப்படுகிறது.
மதுரையில் காத்திகை தீபம் அன்று மக்கள் எப்படி தாமாக முன்வந்து வீடுகள் முன்பு எவ்வாறு தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவார்களோ அதேப்போல் வீடுகள் முன்பு விளக்கேற்றி முருகன் படம் வைத்து பூஜை செய்து கந்த சஷ்டி பாராயணம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்பாடாக அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் கோயில் வாசலிலும், முக்கிய தெருக்களிலும், மலையை சுற்றியும் சமூக இடைவெளியுடன் விளக்கேற்றி, கந்த சஷ்டி பாராயணம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மாநில பொதுச் செயலர் ஆர்.ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் கோயில்களை திறக்கவும், கொடி நோய் கரோனாவை போக்கடிக்கும் வகையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட செயலர் ஹரிகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.