

இயல்பு நிலை முழுவதுமாகத் திரும்பியவுடன் பள்ளிகள் திறக்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் முதல்வர் பழனிசாமி இன்று (ஆக.8) கரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"இயல்பு நிலை திரும்பினால் பள்ளிகள் திறப்பு
கரோனா வைரஸ் பரவல் குறையாத நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியத்துவமானது. ஆகவே, இந்தியா முழுவதுமுள்ள நிலைமைக்கு ஏற்றவாறு பள்ளி திறப்பது குறித்து தமிழக அரசு செயல்படும். நிலைமை சீராகும்பொழுது நிச்சயமாக பள்ளிகள் திறக்கப்படும்.
கேரளாவில் மலைச்சரிவு
நீலகிரி மாவட்டத்தில் மழையின் காரணமாக மலைச்சரிவு ஏற்படுகிறது. கேரளாவில்கூட கனமழை காரணமாக பல வீடுகள் மலைச்சரிவில் சரிந்து சுமார் 80-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும், சுமார் 15 நபர்கள் இறந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
அதேபோல, நம்முடைய மாநிலத்தில், நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்தக் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களை பள்ளிகளில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பிற வசதிகளைச் செய்து கொடுத்துள்ளோம்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் இருவரும் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்கள். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டு, பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
பிளாஸ்மா தானம் செய்ய முன் வர வேண்டும்
ஒவ்வொருவரும், தாங்களாக, அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளைப் பின்பற்றினால் நாம் இயல்பு நிலைக்கு எளிதாகத் திரும்பி விடலாம். இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருந்தால் மருந்தை உடம்பில் செலுத்தி குணமடையச் செய்துவிடலாம். பிளாஸ்மா சிகிச்சையை நாம் மேற்கொண்டு வருகிறோம், அது நல்ல பலனை அளிக்கிறது.
சென்னையில் 57 நபர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையைக் கொடுத்திருக்கிறோம். பெரும்பாலானவர்கள் குணமடைந்து இருக்கிறார்கள். எனவே, தொற்று ஏற்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் கழித்து பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்தால் குணமடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தல் வரும் போது கூட்டணி முடிவு
இப்பொழுதுதான் அணையில் தண்ணீர் உயர்ந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் ஓரளவு வந்தவுடன் மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
அதிமுக இதே கூட்டணியைத் தொடருமா என்பதனை தேர்தல் வரும் காலத்தில் அதைப் பற்றிப் பேசலாம்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.