

தூத்துக்குடியில் திருட்டு வழக்கில் போலீஸாரால் மீட்கப்பட்ட ரூ.11 லட்சம் மதிப்பிலான 40 பவுன் தங்க நகைகளை உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று நேரில் ஒப்படைத்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்பிக் நகர் பகுதியைச் சேர்ந்த சிலுவை சகாயம் மகன் வின்ஸ்டன் அந்தோணி சேவியர் (31). ஸ்பிக் ஆலையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் 26-ம் தேதி வின்ஸ்டன் அந்தோணி சேவியர் குடும்பத்தோடு வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டில் இருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான 40 பவுன் தங்க நகைகளை மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டார்.
இது தொடர்பாக முத்தையாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வின்ஸ்டன் அந்தோணி சேவியர் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசித்து வந்த மேற்குவங்க மாநிலம் பார்புரா மாவட்டம், பிரபானி கிராமத்தைச் சேர்ந்த திரிபங்கா மகந்தா மகன் சிரன்ஜித் மகந்தா( 26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அடிப்படையில் மறைத்து வைத்திருந்த 40 பவுன் நகைகளும் மீட்கப்பட்டன.
இந்த நகைகளை வின்ஸ்டன் அந்தோணி சேவியர் குடும்பத்தினரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று நேரில் ஒப்படைத்தார். அப்போது காவல் துறையினருக்கு வின்ஸ்டன் அந்தோணி சேவியர் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகை கண்டுபிடித்து நகையை மீட்ட முத்தையாபுரம் ஆய்வாளர் அன்னராஜ் மற்றும் போலீஸாரை எஸ்பி பாராட்டினார்.
கரோனா தடுப்பு பொருட்கள்:
மேலும் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல்துறையினருக்கும் 12,000 முகக்கவசங்கள், 1800 கிருமி நாசினி பாட்டில்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினருக்கு 50 பைபர் முகத்திரைகள் ஆகியவற்றை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார். ஏகம் என்ற அமைப்பு சார்பில் இவைகள் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் செல்வன், கோபி, தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் அன்னராஜ், தூத்துக்குடி போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் மற்றும் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.