கரோனா பரவல் குறைந்ததால் இயல்புநிலைக்குத் திரும்பும் மதுரை: தொற்று ஏற்படுவோரைவிட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கரோனா பரவல் குறைந்ததால் இயல்புநிலைக்குத் திரும்பும் மதுரை: தொற்று ஏற்படுவோரைவிட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
Updated on
2 min read

மதுரையில் கரோனா பரவல் விகிதம் குறைந்ததால் மக்கள் அச்சமில்லாமல் வழக்கமான இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். தினமும் தொற்று பரவலைவிட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக கரோனா வைரஸ் நோய் சென்னையைப்போல் வேகமாகப் பரவியது. தொற்றுப் பரவலில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அடுத்தப்படியாக மதுரை 4-வது இடம் பிடித்தது.

ஒரு கட்டத்தில் சென்னையுடன் போட்டிபோடும் அளவிற்கு கரோனா மதுரையில் ருத்தரதாண்டவம் ஆடியது. 100 பேருக்கு சோதனை செய்தால் அதில் 20 பேருக்கு தொற்று ஏற்படத்தொடங்கியது. தினந்தோறும் சராசரியாக 400 முதல் 500 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர். சில நாட்களில் 600-க்கும் மேலும் இந்த பாதிப்பு சென்றது. உயிரிழப்பும் 8 முதல் 10 பேர் வரை ஏற்பட்டது. மக்கள் மத்தியில் பெரும் அச்சமும், பதட்டமும் ஏற்பட்டது. பரிசோதனையை அதிகரிக்ககோரி எம்.பி. சு.வெங்கடேசன், திமுக எம்.எல்.ஏ. ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மதுரையில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன. மாநகராட்சி, புறநகர் மாவட்ட கிராமங்களில் பொதுவெளியில் அதிகமான காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதோடு வீடு வீடாக சுகாதார களப்பணியாளர்களை அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கண்டுபிடிக்கப்பட்ட நோய் அறிகுறியுள்ள நோயாளிகளுக்கு கரோனா பரிசோதனை செய்து, அவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கப்பட்டது.

தொற்று ஏற்பட்டவர்களை அரசு மருத்துவமனை, கட்டுப்படுத்தப்பட்ட கரோனா சிகிச்சை மையங்கள் அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தி மருத்துவ சிகிச்சை, ஆலோசனை வழங்கப்பட்டது. அதனால், அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

பரிசோதனை அதிகரிப்பால் நோயாளிகள் அதிகளவு கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ராஜாஜி மருத்துவமனையை தவிர தோப்பூர் காசநோய் மருத்துவமனை, வேளாண்மை கல்லூரி, தியாகராசர் இன்ஜினியரிங் கல்லூரி, காமராஜர் பல்லைக்கழக விடுதி உள்ளிட்ட மேலும் 4 இடங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டது.

கூடுதலாக ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். சு.வெங்கடேசன் எம்பி, அரசு மருத்துமவனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை தனது எம்பி நிதியிலிருந்து வாங்கி கொடுத்தார்.

அதுபோல் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் ஏற்பாட்டின்பேரில் மாவட்டத்திற்கு கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வரைவழைத்து பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

தினமும் ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளருடன் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். கரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளே முக்கிய மருந்து என உலக சுகாதார நிறுவனம் கூறியதின் அடிப்படையில் மதுரையில் அனைத்து கரோனா மருத்துவ சிகிச்சை மையங்களிலும் சிகிச்சைப்பெற்ற நோயாளிகளுக்கு வருவாய்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் அம்மா கிச்சன் உருவாக்கப்பட்டு அதில் மூன்று வேளைக்கும் நோயாளிகளுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகள், உணவு தானியங்கள், முட்டை உள்ளிட்ட பல்வகை உணவுகள் தயார் செய்து வழங்கப்பட்டன. இதனால், மதுரையில் கட்டுப்பாடு இல்லாமல் பரவிய கரோனா தொற்று நோய் தற்போது குறைந்துள்ளது.

கடந்த 4-ம் தேதி 40 பேருக்கும், 5-ம் தேதி 106 பேருக்கும், 6-ம் தேதி 101 பேருக்கும், 7-ம் தேதி 109 பேருக்கும் என தற்போது பரவல் விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. இன்னமும் தினமும் 4,500 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

அதேபோல், சிகிச்சையில் குணமடைந்து வீட்டிற்கு திரும்பும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 11,791 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 9,733 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது தினமும் மதுரையில் பாதிப்பு ஏற்படுவோரை காட்டிலும், இந்த நோயிலிருந்து மீள்வோர் எண்ணிக்கைதான் அதிகரித்துள்ளது.

அதனால், மக்கள் அச்சமில்லாமல் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். தொழில் நிறுவனங்கள் வழக்கமான செயல்பாட்டிற்கு திரும்ப தொடங்கியுள்ளன. சாலையோர வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளனர். அதனால், கரோனா பரவலுக்கு மோசமான உதாரணமாக காட்டப்பட்ட மதுரை, தற்போது கரோனா சிகிச்சை மற்றும் நோயாளிகள் பராமரிப்பில் மற்ற மாவட்டங்களுக்கு மதுரை மாவட்டம் முன்மாதிரி மாவட்டமாக திகழும் நிலைக்கு வந்துள்ளது.

இதை நேற்று முன்தினம் மதுரை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் கே.பழனிசாமி குறிப்பிட்டு, மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி மேற்கொண்ட வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோரை பாராட்டியுள்ளார். அதோடு, அவர், இந்த நிலையை மதுரை மாவட்டம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தொடர்ந்து கரோனாவே மாவட்டத்தில் இல்லை என்ற நிலைக்கு கொண்டு வரவும் ஆலோசனை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in