

கேரள நிலச்சரிவில் சிக்கி தென்காசியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மாயமாகினர். ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் தேயிலைத் தோட்டம் உள்ளது. இங்கு தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
அவர்கள் அதே பகுதியில் உள்ள தொகுப்பு வீடுகளில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்க்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் பணி முடிந்து இரவில் வீட்டில் குடும்பத்துடன் தொழிலாளர்கள் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் தேயிலைத் தோட்டம் முழுவதும் சரிந்து தொழிலாளர்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகள் மீது விழுந்தது. இதில், வீடுகளில் இருந்த 85 பேர் மண்ணில் புதைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர் தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள ரத்தினபுரி என்ற நவாச்சாலை கிராமத்தைச் சேர்ந்த காந்திராஜன் (48) என்பது தெரியவந்துள்ளது. இவரது மனைவி ராணி (42), மகள்கள் காயத்ரி (24), கார்த்திகா (22), கஸ்தூரி (20), மாமியார் செல்லம்மாள் (65), காயத்ரியின் 6 மாத ஆண் குழந்தை என மேலும் 6 பேரை காணவில்லை.
அவர்களும் மண்ணில் புதைந்து இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.