

மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.50 லட்சம் குறைக்கப்பட்டது குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். இரு மொழிக்கொள்கையில் மாற்றமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்றுத் தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.50 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் உயிரிழந்த ஆய்வாளர் முரளி உள்ளிட்டோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
தமிழக அரசு முன்களப் பணியாளர்களை உதாசீனப்படுத்துகிறது, அறிவித்தபடி ரூ.50 லட்சம் வழங்கவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமியிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அவர் அதற்கு விளக்கம் அளித்தார்.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி இன்று அளித்த பேட்டி:
''தேசிய கல்விக் கொள்கையை ஆராய தமிழக அரசு குழு அமைத்துள்ளது. குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு ஆராய்ந்து குழு அறிக்கை வந்தவுடன் அதன்படி செயல்படுத்தப்படும். தமிழக அரசைப் பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நடப்போம்.
இ-பாஸ் முறை தற்போது எளிதாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு குழுதான் பரிசீலித்துக் கொடுத்து வந்தது. தற்போது கூடுதலாக ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்களும் பரிசீலித்துக் கொடுக்க உள்ளனர். ஏனென்றால் அவசியமற்ற காரணத்திற்காகவெல்லாம் பலர் அதைப் பயன்படுத்துகிறார்கள்.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் இங்கு வந்து பணிபுரிய ஆசைப்பட்டால், அவர்களை அந்த நிறுவனம் அழைத்து வந்து மருத்துவச் சோதனை நடத்தி அவர்கள் பணியாற்ற வசதி செய்யப்பட்டுள்ளது. இ-பாஸ் முறையில் மேலும் தளர்வாக நடக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை தளர்வுடன்தான் உள்ளது. ஊரடங்கு என்பது ஒரு கட்டுப்பாடுதான். இது ஒரு புதிய நோய். நாம் கட்டுப்பாட்டுடன் இருந்தால்தான் இந்நோயை வெல்ல முடியும். இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர் இருப்பைக் கணக்கிட்டு விரைவில் மேட்டூர் கிழக்கு கால்வாய் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும்.
மருத்துவர்கள், செவிலியர்கள் முன்களப் பணியாளர்களாக கரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டு கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் நேரடியாக இழப்பீடு ரூ.50 லட்சம் என அறிவித்தோம். மத்திய அரசு அவர்களுக்கான இழப்பீட்டை அறிவித்துள்ளது. பிற பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் என அறிவித்திருந்தோம் அதை ரூ.25 லட்சமாக உயர்த்தியுள்ளோம். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அதுவும் கொடுக்கப்படும்''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.