

உலகமெங்கும் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க கிருமிநாசினி தெளித்தல், முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் மற்றும் கைகழுவுதல் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இவற்றை மட்டுமே கடைப்பிடித்தால் போதாது. கரோனாவைச் சமாளிக்க தனி மனித நோய் எதிர்ப்பு சக்தியும் மிக முக்கியம்.
இந்த நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க ஆரோக்கியமான உணவுமுறை அவசியம். அந்த வகையில் நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் இல்லத்தரசிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் உணவு முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆன்லைனில் தொடர்ச்சியாக ஒருமாத காலம் ஆரோக்கிய சமையல் போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. பேரூராட்சி அலுவலகத்திலும்கூட அலுவலகப் பணியாளர்கள் நலன் கருதி ‘குக் ஃப்ரம் ஆபீஸ்’ என அலுவலகத்திலேயே நோய் எதிர்ப்பு தரும் ஆரோக்கிய சமையல் செய்யப்படுகிறது.
இதன் அடுத்த கட்டமாக பேரூராட்சியின் வேண்டுகோளை ஏற்று இப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவு வகைகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ள உணவகங்களும் தற்போது முன்வந்துள்ளன. கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவகங்களில் நோய் எதிர்ப்பு சக்திமிக்க உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இதன்படி மதிய உணவில் மிளகு சீரகப் பொடி, கீரைக் கூட்டு, காய்கறி சாம்பார், தூதுவளை - எலுமிச்சை ரசம், இஞ்சி கலந்த மோர், நெல்லிக்காய் ஊறுகாய் அல்லது துவையல் மற்றும் இந்து உப்பு உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த உணவு முறையைப் பின்பற்ற பேரூராட்சி செயல் அலுவலர் குகன், உணவக உரிமையாளர்களுடன், கலந்தாலோசனை நடத்தினார். அதில், சாப்பாட்டு விலையை உயர்த்தாமல் நடப்பில் உள்ள விலைக்கே வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து உணவகங்களில் பேரூராட்சி சார்பில் உணவுப் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற திருக்குறளும் அச்சிடப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு உணவக உரிமையாளர்களும் தங்கள் ஆதரவை அளித்துள்ளனர்.
இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்களான தி.சாந்த மோகன், கார்த்திக், தியாகராஜன் ஆகியோர் நம்மிடம் பேசுகையில், "வாடிக்கையாளர் நலனில் அக்கறை செலுத்துவதற்கு, எங்களுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாக இதைக் கருதுகிறோம். இதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் பேரூராட்சியின் செயல்பாடுகளையும் நாங்கள் பாராட்டுகிறோம்" என்றார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன், "பசிக்காகவும் ருசிக்காகவும் உணவளிக்கும் ஓட்டல்களில், மக்களின் ஆரோக்கியமும் காக்கப்பட வேண்டும் என்பதால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும்படி ஓட்டல் உரிமையாளர்களைக் கேட்டுக்கொண்டேன். அதை ஏற்று உடனடியாகச் செயல்படுத்திய உணவக உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி, பசிக்காகவும் ருசிக்காகவும் மட்டுமல்லாது நமது ஆரோக்கியத்திற்காகவும் உணவகத்திற்குச் சாப்பிடச் செல்வோம்" என்றார்.