கோழிக்கோடு விமான விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர், ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
2 min read

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு நேற்று (ஆக.7) 191 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், விமானம் தரை இறங்கும்போது விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு 7:38 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மழை காரணமாக விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கியபடி விலகிச் சென்று மோதியது. இதில் முன்பக்கம் விபத்துக்குள்ளானது. மேலும், லேசான அளவில் நொறுங்கியது. உடனடியாக, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விரைந்து வந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 123 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர்

நேற்று, 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து சுமார் 191 நபர்களுடன் கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்திய விமானம், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியதில், விமானி உள்பட பலர் உயிரிழந்துள்ளதாகவும், பெரும்பாலான பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் வந்த செய்தி எனக்கு மிகுந்த வேதனை அளித்தது.

இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விபத்தில் பெரும்பாலானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர் என்ற செய்தியை அறிந்தேன். இவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக

ஏர் இந்தியா விமான விபத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். கோழிக்கோடு மக்களுக்கும் விமான நிலையத்தின் பணியாளர்களுக்கும் பாராட்டுகள். ஏற்கெனவே அதிகமான பணிகளை மேற்கொண்டுள்ள கேரளாவின் மருத்துவப் பணியாளர்களுக்கும் பாராட்டுகள்.

சரத்குமார், தலைவர், சமத்துவ மக்கள் கட்சி

கேரள மாநிலம், கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நேற்றிரவு விபத்துக்குள்ளாகி இருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.

170-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த விமானத்தில், அனுபவம் வாய்ந்த 2 விமானிகள் உட்பட பயணிகள் பலர் உயிரிழந்தும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது.

தங்களது அன்புக்குரியவர்களை மண் சரிவிலும், விமான விபத்திலும் இழந்து வேதனையில் வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்தப் பேராபத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் பூரண நலம் பெற்று அவரவர் இல்லங்களுக்குப் பாதுகாப்பாகத் திரும்ப வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி.

துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி விமானிகள் உட்பட பலரும் உயிரிழந்திருப்பதும் 120-க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றிருப்பதும் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. இக்கோர விபத்தில் பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகெங்கும் மக்களை வேதனைக்கும் சோதனைக்கும் உட்படுத்தி வரும் கரோனா தொற்றுப் பாதிப்பால் தாங்கள் பணியாற்றிய இடங்களிலிருந்து தங்கள் சொந்த ஊருக்குத் தங்கள் மனைவிகளை, உறவினர்களை, நண்பர்களைக் காண வந்த இந்தியர்கள் விமான கோர விபத்தில் அகால மரணம் அடைந்துள்ளது மிகப் பெரும் துயர் ஆகும். இந்த விமான விபத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் கடும் மழையின் காரணமாக விமானம் தரையிறங்கும்போது, ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகி விமானி உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்து அதிர்ச்சியும் வருத்தத்தையும் அளிக்கிறது.

துபாயில் பணிபுரிந்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 'வந்தே பாரத்' ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கடும் மழையின் காரணமாக விபத்துக்குள்ளானது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நிவாரணமும் வழங்கும்படி மத்திய, மாநில அரசுகளை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in