

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்றுடன் நேற்று முன்தினம் தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு விநாடிக்கு 4,528 கனஅடி தண்ணீர் வரத்தாகிறது.
மழையால் கால்வாய், ஆறுகளில் மழைநீர் பெருக்கெடு த்து ஓடி வருகிறது.
வடசேரி அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.
சூரங்குடி, குலசேகரம், தக்கலை உட்பட பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. நாகர்கோவில் ஊட்டுவாழ் மடத்தில் மழையால் 6 வீடுகள் சேதமடைந்தன.
கன்னியாகுமரி முதல் நீரோடி வரை கடல் சீற்றம் நிலவியது. குளச்சல், முட்டம், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
அதிகபட்சமாக சிற்றாறு இரண்டில் 76 மிமீ மழை பதிவானது. பெருஞ்சாணி, புத்தன்அணையில் தலா 55, பேச்சிப்பாறையில் 48, சுருளகோட்டில் 67, தக்கலையில் 42, சிற்றாறு ஒன்றில் 51, பூதப்பாண்டியில் 39, கன்னிமாரில் 44, கோழிப்போர்விளையில் 48, மாம்பழத்துறையாறில் 42, அடையாமடையில் 39, குருந்தன்கோட்டில் 25, முள்ளங்கினாவிளையில் 52, ஆனைகிடங்கில் 42, முக்கடல் அணையில் 30, திற்பரப்பில் 62 மிமீ மழை பெய்திருந்தது.
பேச்சிப்பாறை அணைக்கு 2,271 கனஅடி, பெருஞ்சாணிக்கு 2,257 கனஅடி தண்ணீர் வரத்தாகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை 31.60 அடியாக உயர்ந்தது.
77 அடி கொண்ட பெருஞ்சாணி அணை 54.60 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. நீர் இருப்பை பெருக்கும் வகையில் பெருஞ்சாணி அணை அடைக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறையில் இருந்து 427 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முக்கடல் அணை 9 அடியாக உயர்ந்தது. சிற்றாறு அணையும் 8.56 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.