

தென்காசியில் கடந்த 1997-ம் ஆண்டில் ‘சீனியர் சிட்டிசன்ஸ் கவுன்சில்’ அமைப்பு முன்னாள் ஆட்சியர் தியாகி கே.லட்சுமிகாந்தன் பாரதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக அழகராஜா செயல்படுகிறார். நலிந்த மூத்த குடிமக்களின் நலன் பேணும் திட்டங்களை வகுத்து செயல்படுத்துதல், துணையின்றி வாழும் மூத்த குடிமக்களின் துயர்களை இயன்றவரை நீக்குதல் போன்ற குறிக்கோள்களுடன் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மூத்த குடிமக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. அத்துடன், தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு கடந்த 14 ஆண்டுகளாக வீடு தேடிச் சென்று உணவு வழங்கும் பணியை லாப நோக்கமின்றி இந்த அமைப்பினர் செயல்படுத்தி வருகின்றனர்.
2006-ல் தொடக்கம்
இதுகுறித்து சீனியர் சிட்டிசன்ஸ் கவுன்சில் மதிப்புறு தலைவர் துரை தம்புராஜ் கூறியதாவது: ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த நான், திருச்சி பெல் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றினேன். பணி ஓய்வுக்கு பின்னர், கடந்த 1991-ம் ஆண்டு எனது மனைவியின் ஊரான இலஞ்சிக்கு வந்து, குடும்பத்துடன் குடியேறினேன். சுதந்திரப் போராட்ட வீரரான எனது மாமனார் துரைராஜ் பாண்டியன் தென்காசி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர்.
தென்காசி சீனியர் சிட்டிசன்ஸ் அமைப்பில் தற்போது 289 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 2006-ம் ஆண்டு மூத்த குடிமக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கினோம். இலஞ்சியில் எங்கள் வீட்டில் ஒரு பகுதியில் சமையல் கூடம் அமைத்து, சமையல் செய்து, டிபன் கேரியர்களில் வைத்து மூத்த குடிமக்களுக்கு வீட்டுக்கு நேரடியாக சென்று வழங்குகிறோம்.
தினமும் காலை, மதியம் 2 வேளை சாப்பாடு வழங்குகிறோம். மதிய உணவையே இரவுக்கும் பயன்படுத்திக்கொள்கின்றனர். பத்ம விருது பெற்ற முதியோர் நல சிறப்பு மருத்துவர் வி.எஸ்.நடராஜனிடம் ஆலோசனை பெற்று, முதியோரின் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ப உப்பு, காரம், புளிப்பு இல்லாமல் உணவு சமைத்து வழங்குகிறோம். தற்போது தென்காசி, செங்கோட்டை, மேலகரம், இலஞ்சி பகுதியில் 120 பேருக்கு உணவு வழங்குகிறோம். வீட்டில் சமைக்க முடியாத, தனியாக வசிக்கும் முதியோருக்காக உணவு வழங்குகிறோம்.
லாப நோக்கமில்லை
உணவு சமைக்கும் பணியில் 3 பேர் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு ஊருக்கும் ஆட்டோவில் டிபன் கேரியர்களில் உணவு கொண்டு சென்று வழங்குகிறோம். காலை உணவு 8.30 மணிக்குள்ளும், மதிய உணவு 11 மணிக்குள்ளும் வீடுகளுக்குச் சென்று வழங்கப்படுகிறது. காலையில் 3 நாட்கள் இட்லி, ஒரு நாள் தோசை, ஒரு நாள் நவதானிய தோசை வழங்கப்படுகிறது. மதியம் சாப்பாடு, சாம்பார், பொரியல், கூட்டு வழங்குகிறோம்.
அரிசி, காய்கறி, சமையல் பொருட்கள், ஆட்டோ வாடகை, சமையல் பணியாளர்கள் சம்பளம் என அனைத்துக்கும் ஆகும் செலவை கூட்டி, எத்தனை சாப்பாடு வழங்கப்படுகிறதோ அந்த எண்ணிக்கைக்கு கணக்கிட்டு, லாப நோக்கமின்றி சாப்பாட்டுக்கான பணத்தை மட்டும் உணவு சாப்பிடும் முதியோரிடம் இருந்து மாதந்தோறும் பெற்றுக்கொள்கிறோம். ஆரம்பத்தில் 25 பேருக்கு உணவு வழங்கினோம். ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 25 ரூபாய் ஆனது. தற்போது தினமும் 120 பேருக்கு உணவு வழங்குகிறோம். நாளொன்றுக்கு 106 ரூபாய் ஆகிறது” என்றார் அவர்.